தமிழ்நாடு

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை: இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்

DIN

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை மலேசியா சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மலேசியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.
இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தி:
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பினாங்கில் சனிக்கிழமை (ஜூன் 10) காலை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க வந்த அழைப்பை ஏற்று, மலேசியா செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் விசா கேட்டு வைகோ விண்ணப்பித்தார்.
அவருக்கு கடந்த வாரம் விசா வழங்கப்பட்டது. வியாழக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு தனது செயலாளர் அருணகிரியுடன் வைகோ மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
கோலாலம்பூர் விமானநிலையத்தை வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அவர்கள் சென்றடைந்தனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்த குடிவரவு அதிகாரிகள், வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் எனக் கூறியதோடு, இலங்கையில் அவர் மீது பல வழக்குகள் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது என்று கூறி, மலேசியாவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடை விதித்துள்ளனர். மேலும், அவருடைய கடவுச் சீட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தத் தகவலை அறிந்த துணை முதல்வர் ராமசாமி, விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், வைகோவை அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும், குடிவரவு அலுவலகத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்து, அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் உணவு அருந்த வைகோ மறுத்துள்ளார். பின்னர், அவரை இந்தியாவுக்கு மலேசிய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.

ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்

மலேசிய நாட்டுக்குள் நுழைய வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: வைகோவை மலேசிய விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. முறைப்படி விசா பெற்று சென்றவரை மலேசிய அரசு கைது செய்து, தனி அறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அத்துமீறலும் அராஜக நடவடிக்கையுமாகும்.
இந்திய நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஓர் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் வைகோவின் கைது பற்றி மத்திய அரசும் உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து வைகோ கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
சு.திருநாவுக்கரசர்: மலேசியாவுக்கு விசா பெற்றுதான் வைகோ சென்றுள்ளார். ஆனால், அவரை உள்ளே விடாமல் மலேசிய அரசு தடுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக வைகோவுக்கும் காங்கிரஸýக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், மலேசிய அரசின் நடவடிக்கை ஏற்புடையது இல்லை.
விஜயகாந்த்: மலேசியா சென்ற வைகோவுக்கு, அந்நாட்டுக்குள் நுழைய தடை விதித்ததுடன், அவருடைய கடவுச் சீட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மூத்த அரசியல்வாதியான வைகோவிடம், மலேசிய அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. இதற்காக மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும்.
ஜி.கே.வாசன்: மலேசியாவுக்குள் நுழையவிடாமல் வைகோவை அந்நாட்டு காவல்துறையினர் தடுத்துள்ள செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசு உடனடியாக மலேசியா நாட்டுடன் தொடர்பு கொண்டு, அந்நாட்டின் ஆபத்தானவர் பெயர் பட்டியலில் உள்ள வைகோவின் பெயரை நீக்க வலியுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT