சென்னை: அதிமுக எம்எல்ஏக்களுக்கு சசிகலா அணி தரப்பில் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் திமுக சார்பில் இன்று காலை நேரில் முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக அணிகள் இரண்டாக பிரிந்த போது, அதிமுக எம்எல்ஏக்களுக்கு சசிகலா அணி தரப்பில் கோடிக் கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டு, சிலருக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக மதுரை எம்எல்ஏ சரவணன் பேசிய ரகசிய விடியோ ஆங்கில தனியார் செய்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்த குதிரை பேரம் தொடர்பாக திமுக வழக்குரைஞர் சண்முகசுந்தரம் இன்று நீதிமன்றத்தில் நேரில் முறையீடு செய்தார்.
புகார் தொடர்பான முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுறுத்தினார்.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த பரபரப்பு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், குதிரை பேரத்தில் கோடிக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டிருப்பதால் சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தப்பட உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, தமிழக சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.