அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது: தம்பிதுரை பேட்டி
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அடுத்த 4 ஆண்டுகளும் ஆட்சி தொடரும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை கூறினார்.
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அடுத்த 4 ஆண்டுகளும் ஆட்சி தொடரும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சனிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்த பின்னர் அவர் அளித்த பேட்டி:
ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். விடியோ காட்சியை எம்.எல்.ஏ. சரவணன் மறுத்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடக்கவில்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. 3 மாதம் கழித்து விடியோவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது நீதி விசாரணை என்பது தேவையில்லாதது
ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரின் முதல்வர் கனவு பலிக்காது. ஆளுநரிடம் அவர் கூறிய புகார் தவறானது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த 4 ஆண்டுகளும் தொடர்ந்து நடைபெறும்.
திமுக நினைப்பதுபோன்று ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அதிமுகவில் பிளவு என்பதே இல்லை. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேறு கட்சிக்குச் செல்ல முடியாது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களித்தால், அந்தச் சட்டப்பேரவை உறுப்பினரின் பதவி பறிபோய்விடும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அப்படியிருக்கும்போது, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, குதிரைபேரம் எதுவும் நடக்கவே இல்லை.
பேச்சு வார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு கலைக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். அணி குழுவை கலைத்தாலும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா. அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.