தமிழ்நாடு

முதல்வர், அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு: ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

சென்னை: வாக்காளர்களுக்கு விலை கொடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு 12.4.2017 அன்று நடைபெறவிருந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்குள் உள்ள இரு அணிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் கடுமையாக போட்டிப்போட்டு தேர்தல் களத்தில் ஊழல் செய்த பணத்தை வாரி இறைத்தனர். ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றி பெறுவதற்கு அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக பணம் கொடுத்துனர். ஆர்.கே.நகரில் பண விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், 8.4.2017 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, “5 கோடி ரூபாய் பணம்”, “89 கோடி ரூபாய் பணம் விநியோகிக்கும் பட்டியல்” உள்ளிட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த வார்டுகள், வார்டு வாரியாக இருந்த வாக்காளர்கள், அவர்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் ஆகியவை தொடர்பான விவரங்கள் எல்லாம் அதில் இடம்பெற்று அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் “டீம்” களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே “கேப்டனாக” இருந்தார் என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய பணப்பட்டியலில் இருந்து தெரியவந்தது.

’லஞ்சம் கொடுத்து வாக்காளர்களை வளைக்கும் மிகப்பெரிய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது என வருமான வரித்துறை சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டது’, என்று இந்திய தேர்தல் ஆணையமே வெளிப்படையாக தனது உத்தரவில் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ’தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்காது’, என்பதை உறுதி செய்துகொண்ட தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட மூன்று ஆணையர்கள் தலைமையில் அவசரமாக கூடி, 9.4.2017 அன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், தமிழக வரலாற்றில் தேர்தல் ஜனநாயகத்தில் மிகப்பெரிய கரும்புள்ளியை விழ வைத்தது அதிமுக அரசு. அரசியல் சட்டப்படி, தன்னாட்சி பெற்ற அமைப்பை தேர்தல் நடத்தவிடாமல் செய்த குற்றத்தில் முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் உள்ளாக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் “வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்” செய்தது குறித்து, முதல்வர் மீதோ, அதிமுக அமைச்சர்கள் மீதோ தேர்தல் ஆணையம் வேறு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வருமான வரித்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட ’89 கோடி ரூபாய் பட்டியல்’ குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வழகுரைஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அவருக்கு பதில் அளித்துள்ள ஆணையம், ’இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171Bன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, ’செல்லூர்’ ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 18.4.2017 அன்றே உத்தரவிட்டுள்ளது’, என்று தெரிவித்துள்ளது. மேலும், 34 பக்கங்கள் கொண்ட வருமான வரித்துறை சோதனை அறிக்கையையும், அத்துடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், தலைமைச் செயலாளருக்கும் இணைத்து தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு மூன்று மாதங்கள் ஆன பிறகும், முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மூர்க்கத்தனமாக அவமதிக்கும் செயலாக இது அமைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை ஏற்று முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை இவ்வளவு தயங்குவது ஏன்? வழக்குப்பதிவு செய்வதற்கு தடையாக இருப்பது யார்? மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள இந்த உத்தரவின் நகல் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதால், ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற தலைமைச் செயலாளர் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது எல்லாம் அடுத்தடுத்த கேள்விகளாக எழுகிறது.

ஆகவே, ஜனநாயகத்தின் எஜமானர்களாகத் திகழும் வாக்காளர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றத்திற்கு உள்ளான முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் உத்திரவை ஏற்று, இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் உத்திரவினை நிறைவேற்ற இனியும் தவறினால், திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT