தமிழ்நாடு

தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 187 தரம் குறைந்தவை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

DIN

தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 187 மாதிரிகள் தரம் குறைந்தவை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அண்மையில், தனியார் பால் நிறுவனங்கள், பால் கெட்டுப் போகாமல் இருக்க பாலில் 'ஃபார்மால்டிஹைடு' என்ற வேதிப் பொருள் கலப்பதாக, தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 272-இல் திருத்தம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், மாலை வரை விசாரணைக்கு வழக்கு வரவில்லை. இருப்பினும், இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் உள்ள விவரம் வருமாறு:
கடந்த ஜூன் 15-ஆம் தேதி, பால் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்டு மாநில அளவிலும், மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலும் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
187 மாதிரிகள் தரம் குறைந்தவை...: கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 2017-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை, சென்னை, காஞ்சிபுரம் உள்பட 32 மாவட்டங்களில் 886 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் 187 மாதிரிகள் தரம் குறைந்தவை ஆகும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் எதுவும் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்படவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளில் 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அபராதமாக ரூ.10 லட்சத்து 26,300 விதிக்கப்பட்டது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் பால் பொருள்களில் 338 மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவற்றில் 132 தரம் குறைந்தவை என்று கண்டறியப்பட்டு, 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 56 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு, அபராதமாக ரூ.6 லட்சத்து 500 விதிக்கப்பட்டுள்ளது. பால் கலப்பட விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை கட்டாயம் பின்பற்றுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் கடந்தாண்டு நவம்பர் 1-ஆம் தேதி கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT