முகப்பு
தமிழ்நாடு

எய்ம்ஸ் எங்கு அமைவது என தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு

எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைவது என்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:49 PM
பகிர்:

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைவது என்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:

தமிழகத்தில் 3 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் தரமான சிகிச்சை பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதற்குத் தீர்வாக அனைத்து வசதிகளுடன் கூடிய எய்மஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளது. தென் மாவட்டங்களின் மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் தற்போது உயர்தர மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனை ஏதும் இல்லை.

மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் பக்கத்து மாநிலமான கேரள மக்களும் பயனடைவர். இந்நிலையில் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத்துறைச் செயலர், எய்ம்ஸ் இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் முடிவில், தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலர், எய்ம்ஸ் இயக்குநர், தமிழக தலைமை சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஜூலை 12 க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய சுகாதார துறை செயலர் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

இதற்காக தமிழக அரசு 5 இடங்களை பரிந்துரை செய்தது. 200 ஏக்கர் நிலம், போக்குவரத்து வசதி இருந்தால், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தயார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.