தமிழ்நாடு

தாகத்தை தீர்க்குமா ஏரிகள்? காலிக் குடங்களைப் பார்த்து சென்னைவாசிகள் கவலை

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு, பாசனத்துக்கும் குடிநீருக்கும் தேவையான நீர் இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது.

வாணிஸ்ரீ சிவகுமார்


சென்னை: கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு, பாசனத்துக்கும் குடிநீருக்கும் தேவையான நீர் இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது.

இந்த நிலையில், கோடை காலம் தொடங்கிவிட்டது. மார்ச் 1ம் தேதி முதலே, கோடை வெயிலின் தாக்கத்தை உணர முடிகிறது. அதில்லாமல், இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துவிட்டது.

இந்த எச்சரிக்கைக்கு அதிர்ச்சியாவதற்குள், தற்போது சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் அதிகபட்சமாக 1 மாதத்துக்குக் கூட போதிய நீர் இல்லை என்பதுதான் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

அதாவது, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது அந்த ஏரியில் இருப்பது 712 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.
 

பூண்டி ஏரி

அதே போல பூண்டி ஏரியின் முழு கொள்ளவு 3,231 மில்லியன் கன அடி. அதில் தற்போது  775 மில்லியன் கன அடி நீர் உள்ளது. சோழவரம் ஏரியின் முழு கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. இதில் தற்போது வெறும் 25 மில்லியன் கன அடி நீர்தான் இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதிலும் 191 மில்லியன் கன அடி நீரே இருக்கிறது.

இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி. ஆனால், அதில் தற்போது 1,703 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருக்கிறது.

சென்னையைச் சுற்றியுள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத் துவக்கத்தில் மொத்தமாக 6,090 கன அடி நீர் இருந்தது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன மழை பெய்ததால் இந்த அளவுக்கு ஏரிகளில் நீர் இருந்தது. எனவே, சென்னைவாசிகளும் தண்ணீருக்காக குடத்தைத் தூக்கிக் கொண்டு லாரிகள் பின்னால் ஓட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
 

ஆனால், இந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி இந்த நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 1,703  கன அடி நீர் மட்டுமே. ஆக மொத்தம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 4 ஆயிரம் கன அடி நீர் இருப்பு பற்றாக்குறை என்று கொள்ளலாம்.

சென்னையில் மொத்தமாக 36 நீர் ஏற்று நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருந்து 520 லாரிகள் மூலமாக சென்னை முழுவதும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 520 லாரிகள் மூலமாக சுமார் 4,200 முறை சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது குடிநீர் பற்றாக்குறையால் இந்த எண்ணிக்கை 6,500  என்ற அளவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஏரிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலையால், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு நீர் ஏற்று நிலையங்கள் மூலம் லாரிகளில் குடிநீர் அனுப்பப்படுகிறது.

ஏரிகளில் தண்ணீர் குறைந்துவிட்ட நிலையில், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. வீராணம் ஏரியும் வறண்டுவிட்டது. தற்போது நெய்வேலி ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

கடல் நீரை குடிநீராகும் திட்டத்தன் மூலம் தினமும் 100 கன அடி நீர் சென்னைக்குக் கிடைக்கிறது.

சோழவரம் ஏரியில் இருந்து சென்னைக்கு 20 நாட்களுக்குத்தான் குடிநீர் அனுப்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில், தற்போது 712  மில்லியன் கன அடி தான் தண்ணீர் உள்ளது. இங்கிருக்கும் நீர் சென்னைக்கு 11 நாட்களுக்குத்தான் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில், சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை போக்க, கோடையை சமாளிக்க சென்னை மாநகராட்சியும், நீர்வளத் துறையும் பகீரத முயற்சிகள் எடுத்து வருகின்றன.

அதே சமயம், கடந்த ஒரு ஆண்டு மட்டுமே பருவ மழைகள் பொய்த்துப் போனது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு சென்னை உட்பட தமிழகத்தில் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மழைக் கொட்டித் தீர்த்ததது. அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு போதிய பராமத்துப் பணிகள் செய்யப்பட்டிருந்தால் 2015ம் ஆண்டு வெள்ளத்தை அடுத்து வரும் கோடையில் வறட்சியை நாம் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

அதே சமயம், கடந்த ஆண்டு ஏரிகளில் நீர் நிரம்பிய நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கையாக பல ஏரிகள் உடைக்கப்பட்டு, சேமித்து வைக்கப்பட வேண்டிய மழை நீர் வெள்ளமாக கடலில் கலந்தது. அந்த சமயத்தில் ஏரிகள் முழுவதுமாக நிரம்பியிருந்திருந்தால், இந்த ஆண்டு வறட்சியைப் பற்றி நாம் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை என்பதே பலரது எண்ணக் குமுறல்.

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவே சென்னைக்குள் பல ஏரிகள் வெட்டப்பட்டன. ஆனால், அவை ஏதோ தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக நினைத்து நாம் அதில் கட்டடங்களைக் கட்டி வாழ்விடமாக மாற்றிவிட்டதால், இன்று ஏரிகள் சுருங்கி அதன் கொள்ளளவும் குறைந்தது.

சென்னையை வானம் பார்த்த பூமியாக்கிய நாம்தான், அடுத்த ஆண்டுகளிலாவது தண்ணீரை சேமித்துவைத்து வறட்சியை சமாளிக்க வழிவகைக் காண வேண்டும். இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் குறைந்த கால இடைவெளியில் வெள்ளத்தில் மிதப்பதும், வறட்சியில் துவளுவதும் நடக்கிறது என்றால் அதற்கு நமது ஆட்காட்டி விரலை இரு கண்களுக்கு இடையே சுட்டிக்காட்டிக் கொள்வது மட்டுமே சரியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT