பொது விநியோக திட்ட குளறுபடிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம்: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் நிகழ்ந்த சுணக்கத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் நிகழ்ந்த சுணக்கத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளி சந்தையில் அதிக விலையில் கிடைக்கும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை பொது மக்களுக்கு குறைவான விலையில் வழங்க தனியான திட்டம் ஒன்று 'சிறப்பு பொது விநியோகத் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியிருந்த அனுமதியானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
ஆனால் அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் இந்த அனுமதிக்கு நீட்டிப்பு பெறாமல் விட்டு விட்டார். இதனால்தான் தற்போது தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் பெரும் சுணக்கம் நிகழ்ந்து விட்டது. இந்த சுணக்கத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்தான் முழு காரணம். தற்போது நிலவும் சூழல் குறித்து பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை.
பின்னர் தற்போது தமிழக அரசு முயற்சிகள் எடுத்ததன் காரணமாக மார்ச் 2-ஆம் தேதி அன்றி சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தப்பட்டு, மார்ச் 10-ஆம் தேதி அன்று பருப்பு கொள்முதலுக்கு புதிய டெண்டர் கோரப்பட்டது.
இந்த தகவல் கேள்விப்பட்ட உடன்தான் பொருள்கள் விரைவில் தடையில்லாமல் கிடைக்கப் போவதை அறிந்து கொண்டு திமுகவினர் அரசியல் லாபத்திற்காக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.