தமிழ்நாடு

தகிக்கிறது வெயில்: 5 நகரங்களில் சதம்

DIN

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்திவேலூரில் 105 டிகிரி பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 62 சதவீதம் குறைவாகப் பெய்தது. இதன் காரணமாக, கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படியே, கோடைக்கால தொடக்கமான மார்ச் மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிகாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசினாலும் நண்பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் திடீரென அதிகரித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்திவேலூரில் 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
கடல் காற்று இல்லாமல் நிலக்காற்று வீசுவதாலும், மேகங்கள் உருவாகாததாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் சராசரியை விட 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகமாகவும், வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 1 முதல் 2 டிகிரி வெப்பம் அதிகமாகவும் காணப்படும். இன்னும் சில தினங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று தெரிவித்தனர்.
மழைக்கு வாய்ப்பு: மேற்கு வங்கத்திலிருந்து உள்தமிழகம் வரையிலான தரைப்பகுதியில் காற்றின் மேலடுக்கில் (நிலப்பகுதியில்) காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் தென்தமிழகம், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

கரூர் பரமத்திவேலூர் 105
திருச்சி, சேலம், மதுரை 101
தருமபுரி 100
வேலூர், திருப்பத்தூர்,
பாளையங்கோட்டை 99
சென்னை 98

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT