தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு: நாளை தீர்ப்பு

DIN


சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு இவ்வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை எம்சிஐ விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தனி நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் மற்றும் மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித் சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில், இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, நாளை தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி நடத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவால் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு மருத்துவர்கள் பலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் பி.வில்சன், கே.எம்.விஜயன் ஆகியோர் ஆஜராகி விரிவாக வாதிட்டனர். அதேபோன்று, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் வி.பி.ராமன், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர் வாதம்: இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக 50 சதவீதம் அதாவது 25 சதவீதம் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தற்போது, தமிழக அரசின் விளக்க குறிப்பேட்டின்படி சாதாரண கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மதிப்பெண்ணும், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்களும் போனஸ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இதன்படி ஒருவருக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும்.

ஆனால், உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் பிரிவு 9(4)-ஐப் பின்பற்றி இந்தக் கல்வியாண்டில் 'நீட்' மதிப்பெண்களோடு 30 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள்படி நடத்த வேண்டும். தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ சேர்க்கையில் மாநிலங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டின்படி அந்தந்த மாநிலங்களே இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என விதிகள் உள்ளதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.

மேலும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி மலை மற்றும் தொலைதூர பகுதிகளில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் மதிப்பெண் வழங்க முடியுமே தவிர, இதர கிராமப்புறங்களில் பணி புரிபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க இயலாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT