அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி இன்று மதியம் நேரில் ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மன்!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி இன்று மதியம் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இன்று மதியம் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட 50 பேர்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்பொழுது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது.
அதன் பின்னர் அமைச்சர் விஜய பாஸ்கர் மூன்று முறை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் அவர் சார்பாக பல்வேறுபட்ட ஆவணங்களுடன் அவரது ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா இன்று மதியம் 2.30 மணி அளவில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவருடைய வருமான விபரங்கள்,வருமானவரித் தாக்கல் செய்வது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அவர் பேரில் உள்ள சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கியமாக அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் நடத்துவதாக கூறப்படும் கல் குவாரி தொடர்பான விவகாரங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்று தெரிகிறது.