அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்ய புதிய விதிகள் அறிவிப்பு சொல்வது என்ன?
அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக தமிழக அரசு, புதிய விதிமுறைகளை உருவாக்கி அது தொடர்பாக இரண்டு அரசாணைகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை
அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக தமிழக அரசு, புதிய விதிமுறைகளை உருவாக்கி அது தொடர்பாக இரண்டு அரசாணைகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
நீர் நிலைகள், வழிபாட்டுத் தலங்கள், அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றத் தடை விதிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விளை நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப்பதிவு செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு செப்.9-இல் தடை விதித்தது. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்யப் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது, இதற்கு கடந்த 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆளுநரும் புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இரண்டு அரசாணைகளும் அரசிதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமில்லா 'லே அவுட்', 'பிளாட்டுகள்' (வீட்டு மனைகள்) விதிகள் -2017 என்ற புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளையும், அந்த வீட்டு மனைகளுக்கு அருகேயுள்ள விற்பனை செய்யப்படாத மனைகளையும் மட்டுமே வரன்முறை செய்ய முடியும்.
இந்த நிலங்களை வரன்முறை செய்ய, இந்த அரசாணை வெளியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அதிகாரி, (கிராம பஞ்சாயத்துகளில் உள்ள நிலங்களுக்கு) வட்டார வளர்ச்சி அதிகாரி, சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலாளர் ஆகியோர் வரன்முறை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் திட்டக் குழுமம், மண்டல திட்டக் குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவை அதிகாரத்துக்கு உட்பட்ட அங்கீகாரம் இல்லாத நிலங்களை வரன்முறை செய்ய, அந்தக் குழுமத்தின் துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
வரன்முறை செய்யக்கூடாதவை: குளம், குட்டை, ஏரி, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலம், பொது பயன்பாட்டு நிலம் (ஓ.எஸ்.ஆர்), பூங்கா, விளையாட்டு மைதானம், சுற்றியுள்ள வீட்டு மனைகளுக்கு செல்லும் பாதையை மறித்து அமைந்துள்ள நிலம், பொது சாலைகள், ரயில் பாதைகளுக்காக ஒதுக்கீடு செய்த நிலம், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் உள்ள நிலங்கள், உயர் மின் அழுத்த கோபுரம் மற்றும் கம்பிகள் ஆகியவற்றின் கீழ் உள்ள நிலங்கள் உள்ளிட்டவற்றை வரன்முறை செய்யக்கூடாது.
மேம்பாட்டுக் கட்டணம்...: மாநகராட்சிப் பகுதி என்றால், 4.8 மீட்டர் அகலம் கொண்ட சாலையும், பேரூராட்சி, கிராம ஊராட்சி என்றால், 3.6 மீட்டர் அகலம் கொண்ட சாலையும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிலங்களை வரையறை செய்ய மாநகராட்சிப் பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100, நகராட்சிப் பகுதிகளில் ரூ.60, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என்றால் ரூ.30 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இதுதவிர, வரன்முறை செய்யப்படும் நிலங்களை மேம்படுத்துவதற்கான கட்டணத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.600 மாநகராட்சிப் பகுதிகளிலும், ரூ.350 சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சிப் பகுதிகளிலும், ரூ.250 முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதிகளிலும், ரூ. 150 பேரூராட்சிப் பகுதிகளிலும், ரூ.100 கிராம பஞ்சாயத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
வட்டியுடன் வசூலிப்பு: இந்த நிலத்தை வரன்முறை செய்ய மேற்கொள்ளும் ஆய்வுப் பணிக்குத் தனியாக ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். நிலத்தை வரன்முறை செய்த பின்னர், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
அந்த உத்தரவின்படி, 30 நாள்களுக்குள் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும். அவற்றை செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் அந்த தொகை 90 நாள்களுக்குள் வசூலிக்கப்படும்.