தமிழ்நாடு

அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தினமணி

அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.  நிர்வாக சீர்கேடுகளிலும் ஊழலிலும் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள அதிமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மணல் மாபியா சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் இருந்து, வருமான வரித்துறையினர் கைப்பற்றிய டைரிகளில், மணல் கொள்ளை விவகாரங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்ற 300 கோடி ரூபாய் ஊழல் பற்றி விரிவான தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன. அவற்றை வருமான வரித்துறையே தலைமைச் செயலாளருக்கு அனுப்பி, ஊழல் குறித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் “அதிகாரப் போட்டியில்” இப்போது சண்டையிட்டு வரும் இரு அணிகளும் ஊழலில் எந்தளவுக்கு மூழ்கிக் கிடக்கின்றன என்பதை இது வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், வருமான வரித்துறை அளித்துள்ள பல்வேறு விவரங்கள் தமிழக அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்களுக்கு உணர்த்தி இருக்கின்றன. “அம்மாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், “தர்மயுத்தம் நடத்துகிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசு கஜானாவை காலி செய்திருப்பது அடுத்தடுத்து வரும் ஊழல் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

அம்மையார் ஜெயலலிதா மரணமடைந்து 15 நாட்களுக்குள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட இன்சூரன்ஸ் ஊழல் விவரங்களை, ஏற்கனவே வார இதழ் இணையதளம் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள ஊழலையும், விதிமுறை மீறல்களையும், ஒரே தவணையில் 808 கோடி ரூபாயை சுகாதாரத் திட்ட இயக்குனர் எதிர்ப்பையும் மீறி கொடுத்து இருப்பதையும் விலாவாரியாக விளக்கி அந்தக் கட்டுரையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

437 ரூபாயாக இருந்த பிரிமியத் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தக் கோரி அந்த நிறுவனம் கேட்டு, அதன்பிறகு 699 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டுள்ள இந்த மிகப்பெரிய ஊழல் ஏழை எளியவர்களுக்காக நிறைவேற்றப்படும் “இன்சூரன்ஸ் திட்டத்திலும்” அதிமுகவினர் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளதை காட்டுகிறது. ஏற்கனவே தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் தனக்கு வேண்டியவர்களுக்கு “அரசு மருத்துவமனைகளை பராமரிக்கும் டெண்டர்” விட்டு, அதில் நடைபெற்ற ஊழல் விவரங்கள் வெளிவந்தன. ஆனால், அதுபற்றி இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை.
 
உணவுத்துறை அமைச்சராக இருக்கும் காமராஜ் மீது, மிரட்டி லஞ்சம் பெற்றதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்து, அதனைத்தொடர்ந்து வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டிரான்ஸ்பர்களிலும், நியமனங்களிலும் மட்டும் ஒரு மாதத்தில் 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதை “அச்சடிக்கப்பட்ட” பட்டியலாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சில தினங்களுக்கு முன்பு கியா கார் நிறுவனத்திடம் “அதிகப்படியான லஞ்சம் கேட்டதாக” அந்த கம்பெனியைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக முகநூலில் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால், 7000 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யவிருந்த அந்த கார் நிறுவனம் இப்போது ஆந்திராவிற்கு போய்விட்டது. ஆனால் இதுபற்றி தொழில்துறை அமைச்சரோ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ இதுவரை வாய் திறக்கவில்லை. அதிமுக அரசில் வெளிவந்த இந்த ஊழல்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இதுவரை டி.ஜி.பி. அந்தஸ்தில் இயக்குநர் நியமிக்கப்படவில்லை. அதன் மூலம் ஊழல்கள் குறித்த விசாரணைகளை அதிமுக அரசு தடுத்து வருகிறது. அது மட்டுமின்றி அதிமுக ஆட்சியின் ஆறு வருட காலத்தில், அமைச்சர்கள் - அதிகாரிகளின் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டிய விஜிலென்ஸ் கமிஷனர் பதவி இன்னும் காலியாகவே வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பதவியின் பொறுப்பு, தலைமைச் செயலாளரிடம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை கமிஷனராக நியமிக்காத காரணத்தால் தமிழக விஜிலெனஸ் கமிஷன் செயலிழந்து விட்டது.
 
ஊழல்களை விசாரிக்கும் ’லோக் அயுக்தா’ அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. நானே பலமுறை இதுபற்றி அறிக்கை விடுத்திருக்கிறேன். சட்டமன்றத்தில் கூட கோரிக்கை வைத்தேன். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இன்னும் அந்த அமைப்பை உருவாக்க அதிமுக அரசுக்கு மனம் வரவில்லை. ஊழல்களை விசாரிக்கும் அமைப்புகள் எல்லாம் தமிழகத்தில் முடக்கப்பட்டு உள்ளதால் ஆளுங்கட்சி அமைச்சர்கள் சுதந்திரமாக ஊழல் புரிந்து, அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அமைச்சர்கள் ஊழல் செய்வதோடு மட்டுமின்றி நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் இந்த ஊழலுக்கு பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக அரசில் இருந்த ஒரு தலைமைச் செயலாளர் பதவியிலிருக்கும் போதே வருமானவரித்துறை ரெய்டு, இன்னொரு தலைமைச் செயலாளர் சஸ்பென்ஸன் என்பதே அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் ஊழல் கரைபடிந்து விட்டதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
 
ஆகவே, அதிமுக அமைச்சர்கள் மீதும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதும் வெளிவந்துள்ள “முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்ட” ஊழல்கள் குறித்து உடனடி விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, முழுநேர கமிஷனரை நியமித்து தமிழக விஜிலென்ஸ் கமிஷனை சுதந்திரமாக செயல்பட, நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, ஊழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தலைமைச் செயலாளருக்கு உள்ள அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT