தமிழ்நாடு

முதலீடுகள் ஆந்திரத்தில் குவிவதற்கும், தமிழகத்தில் சரிவதற்கும் இதுதான் காரணம்: ராமதாஸ்

தினமணி

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களிடம் அரசு வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் தகவல் தொழில்நுட்ப வளாகத்தை அமைக்கவிருந்த அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அத்திட்டத்தைக் கைவிட முடிவு செய்திருக்கிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களிடம் விதவிதமான பெயர்களில் பணம் பறிக்க ஆட்சியாளர்கள் துடிப்பது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்திற்கு தானாக வந்த முதலீடுகளை தொடர்ந்து திருப்பி அனுப்பும் தமிழக அரசின் பொறுப்பில்லாத செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும்.

புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிண்டெல் அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உலக மேம்பாட்டு மையங்கள் என்ற பெயரில் தொழில்நுட்ப வளாகங்களை அமைத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.  இந்தியாவில் மும்பை, புனே, சென்னை ஆகிய இடங்களில் உலக மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ள சிண்டெல் நிறுவனம் அடுத்தக்கட்டமாக திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் இந்தியாவின் நான்காவது வளாகத்தை அமைக்க 2013 ஆம் ஆண்டில் முடிவு செய்தது. இந்த நிறுவனத்தின் புதிய வளாகத்துக்காக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் முதல் கட்டமாக 25 ஏக்கரில் இரண்டரை லட்சம் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப வளாகத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கியது. ஆனால், இந்த நிறுவனத்தின் உலக மேம்பாட்டு மையம் செயல்படுவதற்குத் தேவையான அனுமதியை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் தரப்பில் கோடிக் கணக்கில் கையூட்டு கேட்கப்பட்டதாகவும், அதை தர அந்நிறுவனம் முன்வராததால் ஒப்புதல் அளிக்க அரசு மறுத்துவிட்டது. கையூட்டு கொடுத்து ஒப்புதல் பெறுவதில்லை என்பதில் அமெரிக்க நிறுவனம் உறுதியாக இருந்து விட்டது. அதற்குள் புதிய வளாகத்தைத் தொடங்குவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அந்நிறுவனம் புதிய வளாகத்தை திறக்கும் முடிவை கைவிட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளது.

சிண்டெல் நிறுவனத்தின் புதிய வளாகம் கங்கை கொண்டானில் செயல்படத் தொடங்கினால் 2500 பேருக்கு நேரடியாகவும், அதே எண்ணிக்கையிலானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், எங்கும் கையூட்டு, எதிலும் கையூட்டு எனும் அளவுக்கு ஊழல் பெருக்கெடுத்து விட்ட அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு தொழில் தொடங்குவதற்கும் ஒரு தொகை நிர்ணயித்து கையூட்டு கேட்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் அனைத்து நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வெளியேறி வருகின்றன.  சென்னை அருகே ரூ.10,000 கோடி செலவில் மகிழுந்து ஆலை அமைக்க முடிவு செய்திருந்த தென்கொரியாவின் கியா நிறுவனம் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட கையூட்டை வழங்க முடியாமல் ஆந்திராவுக்கு சென்று தொழிற்சாலை அமைக்கத் தொடங்கியுள்ளது. அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே அமெரிக்க நிறுவனமும் தொழில் திட்டத்தை கைவிட்டிருக்கிறது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  2015-ஆம்  ஆண்டு செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டதாகவும், அவற்றில் 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடியில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை ரூ. 25,020 கோடியே 48 லட்சம் முதலீடு செய்துள்ளன என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2015&ஆண்டில் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையே ரூ.19,811 கோடி மட்டும் தான் என்றும், அதில் ரூ.501 கோடி முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது.

2017&ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் தொடங்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை. மாறாக ஆந்திரத்தில் கடந்த ஜனவரி மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ.10.54 லட்சம் கோடி முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவற்றின் தொழில் திட்டங்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில் அவற்றுக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர அரசு தொழில் முதலீட்டாளர்களை விருந்தினர்களைப் போல வரவேற்று உபசரிக்கிறது. ஆனால், தமிழக அரசோ தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களிடம் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது. தொழில் தொடங்க வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் தமிழக அமைச்சர்கள் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்று கேட்பதை விடுத்து எங்களுக்கு எவ்வளவு  தருவீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, தொழில் தொடங்க வரும் நிறுவனங்களிடம் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள் என கேட்பதற்கு பதிலாக தமது அரசின் சார்பில் எவ்வளவு வசதிகள் செய்து தரப்படும்? என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதை விளக்குகிறார். முதலீடுகள் ஆந்திரத்தில் குவிவதற்கும், தமிழகத்தில் சரிவதற்கும் இதுதான் காரணமாகும்.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதைப் பொறுத்தவரை கடந்த ஆறு ஆண்டு கால அதிமுக ஆட்சி இருண்ட காலமாகும். இந்த ஆட்சி நீடிக்கும் பட்சத்தில் தமிழகத் தொழில்துறை இன்னும் மோசமான சரிவுகளை சந்திக்கப் போவது உறுதி. அவியப் போகும் தீபம் பிரகாசமாக எரியும் என்பதைப் போல, விரைவில் முடிவுக்கு வரப்போகும் இந்த ஆட்சியில் ஊழல்கள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. ஊழலில் திளைக்கும் இந்த பினாமி அரசை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT