அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் மாளிகை பராமரிப்பின்றி உள்ளது.
தஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1019 ஆம் ஆண்டு தனது கங்கை வெற்றியை கொண்டாடும் நினைவாக கி.பி. 1023 ஆம் ஆண்டு ஜயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் என்று புதிய தலைநகரை உருவாக்கி தன்னுடைய நாட்டை அங்கிருந்தவாறு நிர்வகித்தார். அங்கு அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினார்.
இந்த கோயிலை தனது தந்தை தஞ்சையில் கட்டியதுபோல பெரியதாக கட்டினார் ராஜேந்திர சோழன். 8 பக்கங்களோடு அமைக்கப்பட்ட விமானம். கிழக்கு நுழைவு வாயிலில் பெரிய நந்திபகவான். பிரம்மாண்டமான மூலமூர்த்திகள். இருபுறமும் கருங்கல்லால் ஆன துவார பாலகர்கள். ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி வெகு அழகாக செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்.
60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட லிங்கம். இது தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம். இங்குள்ள அம்மன் பெரியநாயகி. பெயருக்கு ஏற்றாற்போல பெரிய உருவத்தில் அம்மன் சிலை. இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர்கால கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இதை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து பராமரித்து வருகிறது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கண்டு அதிசயிக்கின்றனர்.
இதனால், அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கங்கைகொண்ட சோழபுரம் விளங்குகிறது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்கள் தங்கி கண்டுகளித்து செல்லும் வகையில் பயணியர் மாளிகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 2009 ஆம் ஆண்டு சுற்றுலா துறை சார்பில் ரூ. 50 லட்சத்தில் கோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கும்பகோணம் சாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலா பயணியர் மாளிகை கட்டப்பட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கான உணவகம், 5 தங்கும் விடுதிகள், 7 வாடகை கடைகள், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டது.
ஆனால், இந்த பயணியர் மாளிகை தற்போது பயன்படுத்தப்படாமலும், முறையாகப் பராமரிக்கப்படாமலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், வளாகத்தில் முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. பெரும்பாலான ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இதற்கு பாதுகாவலர்கள் யாரும் நியமிக்கப்படாததால், வாயில் கதவு எப்போதும் திறந்தே கிடக்கிறது. இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் சுற்றுலா பயணியர் மாளிகை மாறிவருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கோயிலுக்கு அருகே பயணியர் மாளிகையை அமைக்காமல் கோயிலில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் இந்த மாளிகை அமைக்கப்பட்டதே காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு சேவை சங்க மாவட்டத் தலைவர் ம.ப. அண்ணாமலை கூறுகையில், தற்போது உள்ள சுற்றுலா பயணியர் மாளிகை அருகே நிறைய காலி இடங்கள் உள்ளன. இதில் கூடுதலாக வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வாடகைக்கு விடும்பட்சத்தில், பயணியர் மாளிகை வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்த பலரும் முன்வருவர். இதனால், சுற்றுலா பயணியர் மாளிகையும் பாதுகாக்கப்படும் என்றார்.
இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது பராமரிப்பில்லாமல் கிடக்கும் இந்த சுற்றுலா பயணியர் மாளிகை கோயிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளதால் தங்குவதற்கு யாரும் வருவதில்லை. இதனால் அங்கு கட்டப்பட்டுள்ள உணவகம் மற்றும் கடைகளில் வியாபாரம் இல்லாததால் தற்போது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கோயிலின் அருகே இதுபோன்ற கட்டடம் கட்ட அனுமதியில்லை. கோயிலின் பழைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், சற்று அருகே கட்டடம் கட்ட அனுமதி கேட்டு தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.