தமிழ்நாடு

இந்தியை எதிர்க்கவில்லை; திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்: கனிமொழி

திமுகவினர், இந்தியை எதிர்க்கவில்லை, திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பேசினார்.

DIN

திமுகவினர், இந்தியை எதிர்க்கவில்லை, திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பேசினார்.
இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஜோலார்பேட்டையில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர் முத்தமிழ்செல்வி தலைமை வகித்தார். முதன்மைச் செயலர் துரைமுருகன், கிழக்கு மாவட்டச் செயலர் ஆர்.காந்தி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் செழியன், திருப்பத்தூர் நகரச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஆண்கள், பெண்கள், இளம் வயதினர் மெரீனாவில் ஒன்றாக இணைந்து போராடினர்.
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே கலாசாரத்தை எடுத்துக் கூறும் விதமாக அமைந்தது.
பல மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. தமிழகத்தில் உள்ள இன்னாள், முன்னாள் முதல்வர்கள் தில்லிக்கு சென்று வருகிறார்களே தவிர, மக்களின் கஷ்டத்தை பற்றி எதுவும் எடுத்துக் கூறுவதில்லை.
திமுகவினர் இந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் இந்தியை படித்தே ஆக வேண்டும் என்ற திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டச் செயலர் தேவராஜ், மாவட்டத் துணைச் செயலர்கள் ஜோதிராஜன், சம்பத்குமார், பொருளாளர் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT