தமிழ்நாடு

கரும்பு டன் ஒன்றின் கொள்முதல் விலையை ரூ. 3500ஆக அரசு உயர்த்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தினமணி

கரும்பு டன் ஒன்றின் கொள்முதல் விலையை ரூ. 3500ஆக அரசு உயர்த்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கரும்புக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்தி மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இடுபொருட்கள் விலை உயர்வினால் கரும்பு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலும், பாசன நீர்த் தட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையிலும், கரும்பு விவசாயிகள் பல்வேறு பேரிடர்களால் பாதிப்புக்கு ஆளாகும் சூழ்நிலையிலும், இந்த விலை உயர்வு கரும்பு விவசாயிகளுக்கு நிச்சயமாகப் போதுமானது இல்லை என்றாலும், மாநிலத்தைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு, தான் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கரும்பு விவசாயிகளுக்காக அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக ஏற்று அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
 
மாநிலத்தில் வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையால் கரும்பு விவசாயமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஏறக்குறைய விவசாயமே நொடிந்து போகும் நிலைமைக்கு வந்துவிட்டதை அதிமுக அரசு இன்னமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கடந்த வருடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, விலை உயர்வு அளிக்கப் போகிறோம் என்று அறிவித்து, பிறகு கைவிரித்து விட்டது அதிமுக அரசு. அதேபோல், இந்த வருடம் இன்னும் கூட முத்தரப்புப் பேச்சுவார்த்தையை அதிகாரபூர்வமாக நடத்தாமல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் நடத்திய போராட்டங்களையும் மதிக்கவில்லை.
 
கரும்புக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள விலை உயர்வு போதாது, நியாயமற்றது என்ற சூழலில், கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
2011 தேர்தல் அறிக்கையில் ’கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளிலும் தனியார் ஆலைகளிலும் உள்ள நிலுவைத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று வாக்குறுதி அளித்த அதிமுக அரசு, ஆறு வருடங்கள் நிறைவடைந்த பிறகும் அதுபற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே கூட்டுறவு மற்றும் தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்குவதற்கு மாண்புமிகு முதல்வர் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT