"உள்ளங்கையில் அரசு சான்றிதழ்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலம் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இணைய சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சேவை மையங்கள் மூலம் வருவாய்த் துறையின் பல்வேறு சான்றிதழ்கள், மின் கட்டண சேவை, சொத்து வரி என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உள்ளங்கையில் அரசு சான்றிதழ்: அரசு இணைய சேவை மையங்களின் செயல்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து இணைய சேவை மையங்களிலும் அரசு சேவைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் விண்ணப்பதாரர்கள் அவர்களது சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அவர்களது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக இணைய முகவரி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் இணையத்தின் உதவியுடன் அவர்களது வீட்டில் இருந்தபடியே செல்லிடப்பேசி மூலமாக சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
உள்ளங்கையில் சான்றிதழ் என்ற இந்தப் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழிணையம் ஒருங்குறி மாற்றம்: தமிழ் இணையக் கல்வி கழகத்தின் மூலம் முதல் கட்டமாக 15 தமிழ் மென்பொருள்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் தமிழிணையம் ஒருங்குறி மாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி எழுத்துகள் ஆகிய 2 தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழிணையம் ஒருங்குறி மாற்றியை பயன்படுத்துவதால், பலதரப்பட்ட தமிழ் குறியீடுகள் வாயிலாக உருவாக்கப்பட்ட உரைகள், அட்டவணைகள், படங்கள், புள்ளிகள் போன்வற்றை எவ்வாறு இருக்கிறதோ அதே நிலையில் பாதுகாப்பாக தமிழ் ஒருங்குறிக்கு மாற்ற முடியும்.
தமிழ் மென்பொருள் உருவாக்குவோர், கணினி ஆய்வாளர்கள், நூல்களை வடிவமைப்போர் ஆகியோர் இடையே தமிழ் ஒருங்குறிப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக 10 புதிய தமிழிணையம் ஒருங்குறி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த எழுத்துருக்களை www. tamilvu.org என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாசப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த
முடியும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.