தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலராக இருந்த என். பெரியசாமி மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மாவட்டச் செயலர் பதவி அவரது வாரிசுக்கு வழங்கப்படுமா அல்லது அதிமுகவில் இருந்து வந்த திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பதை தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள திமுக மூத்த நிர்வாகிகளும் உற்றுநோக்கி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் மீது அதிக பற்றுக் கொண்டிருந்த என். பெரியசாமி, கடந்த 1987 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் திமுகவில் கோலோச்சிய தற்போதைய மதிமுக பொதுச் செயலர் வைகோவின் ஆதரவும் பெரியசாமிக்கு இருந்ததால் எதிர்ப்பு அந்தளவுக்கு இல்லை. தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும் அவர் இருந்து வந்ந நிலையில், 1989 இல் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991 இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பெரியசாமி, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்த நிலையில், கிடைக்காத சூழல் உருவானது.
மூன்று முறை தொடர்ந்து மாவட்டச் செயலராக இருந்தால் அவர்கள் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடக் கூடாது என 2000 ஆம் ஆண்டில் திமுக தலைமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உடனே, தன்னோடு இருந்த மாவட்ட பிரதிநிதி சி.த. செல்லப்பாண்டியனை (தற்போது அதிமுக மாவட்டச் செயலர்) திமுக மாவட்டச் செயலராக்கிவிட்டு தென் மண்டல பொறுப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டார் பெரியசாமி. சிறிது காலத்தில் அவர்களுக்குள் ஊடல் வர, தலைமையும் அறிவிப்பை திரும்பப் பெற 6 மாதத்துக்குப் பிறகு மீண்டும் மாவட்டச் செயலர் பொறுப்பை என். பெரியசாமி ஏற்றுக் கொண்டார்.
பின்னர், 2001 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ராஜம்மாளிடம் தோல்வி அடைந்தார். 2006 ஆம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால்,
அப்போது மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த தனது மகள் கீதா ஜீவனை களம் இறக்கினார் பெரியசாமி. அதில் வெற்றி கிடைக்கவே, கீதா ஜீவனுக்கு சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2011 தேர்தலில் சி.த. செல்லப்பாண்டியனிடம் தோல்வியை தழுவிய கீதா ஜீவன், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
கடந்த 30 ஆண்டுகால திமுக வரலாற்றில் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி என். பெரியசாமியின் குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அவர்களை எதிர்த்து குரல் எழுப்பியவர்களால் திமுகவில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கடந்த 2016 தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சி தலைமை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டச் செயலராக என். பெரியசாமியையும், வடக்கு மாவட்டச் செயலராக கழுகுமலை என். சுப்பிரமணியனையும் அறிவித்தது.
கடந்த மாதம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதும் கட்சி தலைமையிடம் என். பெரியசாமி ஒரு கோரிக்கையை வைத்தார். தன்னால் இனிமேல் வேகமாக பணியாற்ற முடியாது என்பதால் தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ள தனது மகன் என்.பி. ஜெகனுக்கு மாவட்டச் செயலர் பொறுப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஜெகன். மாவட்டம் முழுவதும் உள்ள பல ஒன்றியச் செயலர்கள், மாவட்ட நிர்வாகிகளிடம் கடிதம் பெற்று ஜெகனுக்கு ஆதரவாக தலைமையிடம் பெரியசாமி ஒப்படைத்தார். இருப்பினும் தலைமையிடம் இருந்து, உங்கள் காலம் வரை நீங்கள்தான் மாவட்டச் செயலர் என்ற பதில்தான் கிடைத்தது. ஜெகனுக்கு மாவட்டச் செயலர் பதவி வழங்கப்படவில்லை. அது பெரியசாமிக்கு வருத்தமளிப்பதாக இருந்தது.
இதற்கிடையே, பெரியசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனே மாவட்டச் செயலராக வர வேண்டும் என ஆதரவு குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. பெரியசாமியின் ஆதரவாளர்களாக இருந்த பல நிர்வாகிகள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை சந்திக்கத் தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆண்டுகளாக அதிமுக மாவட்டச் செயலராக இருந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு மாவட்டச் செயலர் பொறுப்பை வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்றும், தற்போது அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பெரும்பாலானவர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டு கட்சியை பலப்படுத்துவார் என்றும் மாவட்டம் முழுவதும் பேச்சு எழுந்தது.
ஆனால், திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த காலக்கட்டத்தில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினால் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பேட்டியளித்ததை கட்சியின் தலைமை ரசிக்கவில்லை.
இருப்பினும், பெரியசாமி வகித்து வந்த மாவட்டச் செயலர் பொறுப்பை அவரது மகன் ஜெகனுக்கோ, மகள் கீதா ஜீவனுக்கோ வழங்கினால் தற்போது உள்ள சில நிர்வாகிகளுக்கு மட்டுமே பலன் என்றும், அவர்களால் ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்றும் சிலர் தலைமைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து இதுதொடர்பாக மாநில மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு மாவட்டச் செயலர் பொறுப்பு வழங்கினால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என கட்சியின் மூத்த தொண்டர்கள் சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது உள்ள சூழலில் எதிர்ப்புக் குரலை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஸ்டாலின் இல்லை என்றும், மாவட்டம் முழுவதும் கட்சியை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மதிமுகவில் இருந்து வந்து தற்போது திமுக மாநில இளைஞரணி துணைச் செயலராக இருக்கும் எஸ். ஜோயலும் மாவட்டச் செயலர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். முக ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆதரவு ஜோயலுக்கு உள்ளது.
முப்பது ஆண்டுகளாக மாவட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த பெரியசாமியின் குடும்பத்து வாரிசுகளுக்கு மாவட்டச் செயலர் பதவி வழங்கப்படுமா அல்லது மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எஸ். ஜோயல் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் மட்டுமன்றி மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.