பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு நாகை மாவட்டத்தில் வெள்ளக்காடாகிய விளைநிலங்கள்...
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை மீண்டும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகப்பட்டினத்தில் 70.2 மி.மீ மழை பதிவானது. பலத்த மழை காரணமாக, மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை மீண்டும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகப்பட்டினத்தில் 70.2 மி.மீ மழை பதிவானது. பலத்த மழை காரணமாக, மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகல் நேரத்தில் மழை சீற்றம் குறைந்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. வியாழக்கிழமை இரவு வரை தொடர் மழை நீடித்தது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகப்பட்டினத்தில் 70.2 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : வேதாரண்யம் - 66.6. தரங்கம்பாடி - 63. திருப்பூண்டி - 61.2. சீர்காழி - 45.6. கொள்ளிடம் (ஆணைக்காரன்சத்திரம்) - 42. தலைஞாயிறு - 39.2. மணல்மேடு - 12. மயிலாடுதுறை - 5.
புதன்கிழமை பகல் நேரத்தில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இருப்பினும், புதன்கிழமை பகல் நேரத்தில் மழை சீற்றம் குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 8 மணி முதல் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது.
வீடுகளைச் சூழ்ந்த வெள்ள நீர்... நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் திருநகரி வாய்க்கால், முடவன் வாய்க்கால் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டு, தெற்குவெளி தெரு, விளக்குமுகத் தெரு, தாமரைக்குளம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து, வெள்ள நீரால் சூழப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பழைய தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
வெள்ளக்காடாகிய விளைநிலங்கள்... 4 நாள்களாக நீடித்து வரும் மழை காரணமாக, நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளைநிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை வரை சுமார் 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிக பரப்பிலான விளைநிலங்கள் மழை நீரால் சுழப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 80 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இடைவிடாது மழை தொடர்வதாலும், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்து அதிகரித்திருப்பதாலும் விளைநிலங்களைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடியச் செய்வதில் சுணக்கம் நீடித்து வருகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு... தொடர் மழையின் காரணமாக, நாகை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள பிரதான கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடுமிடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.