முகப்பு
தமிழ்நாடு

ஒப்பந்த முறை செவிலியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

ஒப்பந்த முறை செவிலியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஒப்பந்த முறை செவிலியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக அறப்போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட தமிழக ஆட்சியாளர்கள் அழைப்பு விடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற கடந்த 2015-ஆம் ஆண்டு 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் மூலம் முறையாக விண்ணப்பம் பெறப்பட்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும்படியும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கி சொந்த மாவட்டங்களுக்கோ, அருகமை மாவட்டங்களுக்கோ இடமாற்றம் செய்யக் கோரி கடந்த ஒன்றாம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினார்கள். தங்களின் கோரிக்கைகள் குறித்து தங்களை அழைத்து தமிழக ஆட்சியாளர்கள் பேச்சு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

ஆனால், நியாயமான எந்த கோரிக்கைக்கும் தலை சாய்க்காத அரசு, ஒப்பந்த முறை செவிலியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தமுறை செவிலியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அளவிட முடியாதவை ஆகும். பணி நிலைப்பு பெற்ற செவிலியர்களுக்கு தொடக்க நிலை ஊதியமாக சுமார் ரூ.25,000 வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தமுறை செவிலியர்களுக்கு மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையிலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேனி மாவட்டத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  அங்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கவும், உணவுக்கும் கூட ஊதியம் போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கும்படி கோரியும், கடந்த இரு ஆண்டுகளாக இடமாறுதல் கலந்தாய்வை நடத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.

தகுதியும், திறமையும் உள்ள ஒப்பந்தமுறை செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய அரசு மறுப்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய இரு தீர்ப்புகளையும், தமிழக அரசாணையையும் மீறிய செயலாகும். 1962&ஆம்  ஆண்டின் 191&ஆவது தமிழக அரசாணைப்படி போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், காமராசர் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சொந்த உத்தரவையே தமிழக அரசு மதிக்க மறுப்பது முறையல்ல.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அளித்த பரிந்துரைகளின்படி, சிறிய தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்ச மாத ஊதியமாக 20,000 ரூபாயும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கான இந்த பரிந்துரையை செயல்படுத்தும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளிலேயே ஒப்பந்த முறை செவிலியர்களை குறைந்த ஊதியத்தில் கொத்தடிமை போன்று வேலைவாங்குவது சரியாகுமா? 

தொழிலாளர்களின் ஊதியம் பெறும் உரிமை தொடர்பாக 25.10.2016 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில்,‘‘20 ஊழியர்களுக்கும் கூடுதலாக நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் ஒப்பந்த தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் தர வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இது அரசு மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். ஆனால், பல்லாயிரக்கணக்கில் செவிலியர்கள் பணியாற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிநிலைப்பும், சம ஊதியமும் வழங்க மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

ஒருபுறம் ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, மற்றொருபுறம் சென்னையில் ஒப்பந்தமுறை செவிலியர்களை விட குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தற்காலிக செவிலியர்கள் பணி நிலைப்பு கோரி நேற்று நடத்தியப் போராட்டத்தில் காவல்துறை மூலம் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது சர்வாதிகார அணுகுமுறையாகும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு இரு மடங்கு ஊதியம் உயர்வு வழங்கிய தமிழக அரசு, ஒப்பந்த முறை செவிலியர்கள் மற்றும் தற்காலிக செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பது நியாயமல்ல. அவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்குவதுடன், சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →