தமிழ்நாடு

சசிகலா உறவினர்களின் ஆவணங்கள் ஆய்வுக்கு ஒரு மாதம் தேவைப்படும்: வருமான வரித் துறை தகவல்

DIN

அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருமாத காலம் தேவைப்படும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
போலி நிறுவனங்களை நடத்தியது, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 9-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். 5 நாள்கள் நடைபெற்ற இச் சோதனை திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.
சோதனையின் நிறைவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் கார்களில் வருமான வரித் துறை அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இப்பணி முழுமையாக நிறைவடைய சுமார் ஒரு மாதமாகும் என்று தெரிவித்த அதிகாரிகள், வரி ஏய்ப்புத் தொடர்பான சரியான புள்ளிவிவரத்தை அதன் பிறகே குறிப்பிட முடியும் என்றனர் அதிகாரிகள்.
ஜாஸ் அதிகாரிகளிடம்: ஜாஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் 3 பேர் விசாரணைக்காக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராயினர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், தனித்தனியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதேபோல சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் 3 பேரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக, திவாகரனிடம் விசாரணை மேற்கொள்வதென வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது. புதன்கிழமை (நவ.15) நடைபெறும் விசாரணைக்காக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி உள்ளிட்ட சிலர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT