தமிழ்நாடு

திருப்பதி சேஷாசல வனத்துக்குள் நுழைபவர்களை கண்டவுடன் சுட உத்தரவு: செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பேட்டி

DIN

ஆந்திர மாநில சேஷாசல வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தா ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பதியில் அவர் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: 
திருப்பதி அருகில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், நாட்டு துப்பாக்கி மற்றும் செம்மரக் கட்டைகளுடன் இருந்த சிலரைக் கண்டனர். அவர்கள் போலீஸாரை கண்டவுடன் தப்பியோடி விட்டனர். அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், 6 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த ஹரி (32), ராஜசேகர் (23) என்பதும், தமிழகத்திலிருந்து செம்மரக் கட்டைகளை வெட்ட வரும் செம்மரத் தொழிலாளர்களை நாட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து செம்மரக் கட்டைகளை பறித்துச் சென்று கடத்தி வருவதும் தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின்படி அவர்களுக்கு நாட்டு துப்பாக்கிகளை சப்ளை செய்ததாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜநாலா (52), வேலூர் மாவட்டம், குடியாத்தம் தட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக மாணிக்கம்தான் பணிபுரியும் வெல்டிங் கடையிலிருந்து, உரிமையாளருக்குத் தெரியாமல் நாட்டு துப்பாக்கி செய்ய தேவைப்படும் உபகரணங்கள், பேரல்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்து ராஜநாலாவுக்கு அனுப்பியது தெரிய வந்தது. 
மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கர்நாடகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
மேலும், தற்போது ஆந்திர வனத்திற்குள் செம்மரத் தொழிலாளர்கள் மட்டுமன்றி நாட்டுத் துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்களும் சுற்றித் திரிகின்றனர். செம்மரத்தொழிலாளிகளிடமும் மரம் வெட்ட பயன்படுத்தும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளன. அதேபோல் அவர்களிடம் வழிப்பறி செய்யும் கடத்தல்காரர்களிடமும் நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளன. 
அதனால் வனத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் மற்றும் போலீஸாரின் பாதுகாப்புக்காக இனி அத்துமீறி சேஷாசல வனத்திற்குள் நுழைபவர்கள் யாராகயிருந்தாலும் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT