தமிழ்நாடு

நவ. 24 இல் 'மாணவர் உதவி சேவை மையம்' அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

DIN

மாணவர்களுக்கு பள்ளிப் படிப்புக்குப் பிறகு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து இலவச ஆலோசனை பெறும் வகையில் மாணவர் உதவி சேவை மைய எண் வரும் நவ.24-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தினவிழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.14) நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர், கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:- தமிழகத்தில் 593 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இருப்பினும் பொறியியல் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்புக்குப் பின்னர் மேற்படிப்புக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம், வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் போன்றவை குறித்து இலவச ஆலோசனை பெறுவதற்கு 14417 என்ற உதவி மைய எண் வரும் நவ.24-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. 
'சிப்' இல்லாத ஸ்மார்ட் கார்டுகள்: உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 1.25 கோடி மாணவர்களுக்கு 'சிப்' இல்லாத ஸ்மார்ட் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு. இருப்பினும் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தவும் இந்தப் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் உதவும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகள் 12 லட்சம் பேர் உள்ளனர். இந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை வரும் 20-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
மைய நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி... சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு புதிய நூல்கள் வாங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ள மைய நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதை இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறந்த நூலகர்களுக்கான பரிசுத் தொகையாக தற்போது ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் ஆண்டு முதல் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் செங்கோட்டையன்.
விழாவில் மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ரெ. இளங்கோவன், ஆர்எம்எஸ்ஏ மற்றும் பொதுநூலகத் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT