முகப்பு
தமிழ்நாடு

அரசு வழக்குரைஞர் நியமனத்தில் தாமதம் ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி: அட்வகேட் ஜெனரல் விளக்கமளிக்க உத்தரவு

அரசு வழக்குரைஞர் நியமனத்தில் அரசு செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கமளிக்குமாறு

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அரசு வழக்குரைஞர் நியமனத்தில் அரசு செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கமளிக்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக் பத்மராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு குற்றவியல், உரிமையியல் வழக்குரைஞர்கள் நியமனங்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24-இன் கீழ் விதிப்படி நடைபெற வேண்டும். இப்பிரிவில் மாவட்ட நடுவர் ( மாவட்ட ஆட்சியர்), அமர்வு நீதிபதி ஆகியோர் ஆலோசித்து அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அதே சட்டப்பிரிவின் உட்பிரிவு 5-இல் மாவட்ட நடுவர், அமர்வு நீதிபதி ஆகியோர் அனுப்பி வைக்கும் பட்டியலில் இடம் பெறாத நபர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்ய முடியாது. அரசு வழக்குரைஞர் நியமனத்தில் இந்த விதியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் அரசு வழக்குரைஞர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டது. விதிகளின் அடிப்படையில், எனது பெயர் உள்பட பலரது பெயர்களை கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியரும் எனது பெயர் உள்பட சிலரின் பெயர்களை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியலுக்கான அரசு வழக்குரைஞர் பணியிடத்துக்கு பரிந்துரைத்தார். குறிப்பாக எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதால், எனது பெயர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு பதவிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அரசியல் தொடர்பு இல்லை என்பதற்காக எனக்கு பதவி வழங்கப்படவில்லை. ஆனால் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்காத சிலர், அந்த பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, அரசாணை அடிப்படையில் மாவட்ட நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருப்பவர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்யவும், அதுவரை அரசு வழக்குரைஞர் பணியிடங்களை நிரப்பத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? உயர்நீதிமன்றத்திலும் போதுமான அரசு வழக்குரைஞர்கள் இல்லை. பணியில் இருப்பவர்களும் போதிய ஈடுபாட்டுடன் பணியாற்றுவதில்லை. 
நகராட்சி, வீட்டுவசதி வாரியம் போன்ற அரசின் தனி துறைகளுக்காக நியமிக்கப்படும் அரசு வழக்குரைஞர்கள் வழக்குகளில் ஆஜராவதில்லை. திறமையான வழக்குரைஞர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. அரசு வழக்குரைஞர் நியமனத்தைப் பொருத்தவரை அரசு செயல்படுகிறதா? இல்லையா? 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை இத்தனை நாள்களாக தாமதப்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் நவம்பர் 22-ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →