திருச்சி விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடக்கம்
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையாக, அளவைப் பணியை நிலம் எடுப்புப் பிரிவு பணியாளர்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையாக, அளவைப் பணியை நிலம் எடுப்புப் பிரிவு பணியாளர்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் விமானச் சேவைகள், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்து வசதிகளுடன்கூடிய புதிய முனையம் அமைக்கவும் ரூ. 897 கோடியில் விரிவாக்கப் பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விமான நிலையத்தில் எல் வடிவில் புதிய முனையம் அமைக்கப்படவுள்ளது.
மேலும், கூடுதல் விமானம் நிறுத்தும் வசதி, பெரிய வாகன நிறுத்துமிடம், கூடுதல் பயணிகளைக் கையாளும் வகையில் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. கட்டட வடிவமைப்புப் பணி பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 15 ஆண்டுகள் பயன்பாட்டுக்கான வளர்ச்சியை திருச்சி விமான நிலையம் பெறும் வகையிலும், நாளொன்றுக்கு 2,700 பயணிகளைக் கையாளும் விதத்திலும், 67,500 சதுர மீட்டரில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளை, வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், விமான நிலையத்துக்கு எதிரேயுள்ள பட்டம்மாள் நகர் குடியிருப்புவாசிகள், விரிவாக்கப் பணிகளுக்கு தங்கள் பகுதி நிலங்கள், வீடுகள், கட்டடங்களை கையகப்படுத்தக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் உள்ள இடங்களை அளவீடு செய்ய அலுவலர்கள், நிலஅளவையர்கள் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை வந்தனர். இதையடுத்து உதவி ஆணையர் பெரியண்ணன் தலைமையில், விமான நிலையக் காவல் ஆய்வாளர் பெரியய்யா மற்றும் விரைவுப்படையினர் என 100 -க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். விமான நிலையத்தின் எதிரே, நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் காலை தொடங்கி மாலை வரையில் அளவீட்டு பணிகள் நடைபெற்றன.
கையகப்படுத்தும் பகுதிகள் எவை?
திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக மொத்தம் 632 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதில், 300 ஏக்கர் நிலம் ராணுவத்துக்குச் சொந்தமானதாக உள்ளது. 332 ஏக்கர் நிலம் மக்கள் பயன்பாடு உள்ளிட்ட இதர வகைகளில் உள்ளன. இதில், கே.கே. நகர் விரிவாக்கப் பகுதிகளான பட்டம்மாள் நகர், கீழகுறிச்சி, பாரதி நகர், ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளும் வருகின்றன. இதில், வியாழக்கிழமை பாரதி நகர் பகுதியில் அளவீடு செய்யும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமரசம் செய்து அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அளவெடுக்கும் பணி தொடர்ந்தது.