தமிழ்நாடு

'குட்டி கேரளமாக' மாறுமா கல்வராயன் மலை?: சோதனை முறையில் பயிரிட்ட ரப்பர் மரங்கள் நல்ல வளர்ச்சி

DIN

சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் பயிரிட்ட ரப்பர் மரங்கள் நல்ல வளர்ச்சியடைந்து வருவதால், ரப்பர் உற்பத்தியாகும் குட்டி கேரளமாக மாறுமா? என, அப் பகுதி விவசாயிகள், வனத் துறையினர் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கல்வராயன் மலைப் பகுதியில், இயற்கையாக வளர்ந்து பலனளிக்கும் மா, பலா, கடுக்காய், மூங்கில் மரப் பயிர்கள், வரகு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் நெல், மரவள்ளியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். அதனால் அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வராயன் மலைப் பகுதிக்கு வந்துள்ள விவசாயிகளும், செல்வந்தர்களும், அப் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் மண்வளத்தைக் கண்டு, சோதனை முறையில், அதிக வருவாய் ஈட்டித் தரும் மலைப் பிரதேச பயிர்களைச் சாகுபடி செய்து வெற்றி பெற முயற்சித்து வருகின்றனர். 

கல்வராயன் மலையில், அடியனூர், கிராங்காடு, குன்னூர், முடவன்கோவில், உப்பூர், சேத்தூர், சேம்பூர், வாரம், நாகலுர், பட்டிவளவு, அத்திரிப்பட்டி, பாச்சாடு, தலைக்கரை, தாழ்வள்ளம், கோவில்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சில்வர் ஓக் மரத் தோப்புகளை உருவாக்கி, காபி மற்றும் மிளகு சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில், இயற்கை ரப்பர் 90 சதவீதம் கேரள மாநிலத்தில் உற்பத்தியாகிறது. அங்குள்ள தட்பவெப்ப நிலையும் மண்ணின் தன்மையும், ரப்பர் மரங்கள் வளர்வதற்கு உகந்ததாக உள்ளன. ஒரு ஹெக்டேர் ரப்பர் மரங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 1,850 கிலோ இயற்கை ரப்பர் கிடைக்கிறது.

மலைச் சார்ந்த பகுதி விவசாயிகளுக்கு, மற்ற பயிர்களில் கிடைக்கும் வருவாயை விட, ரப்பர் மரங்கள் வளர்ப்பதன் மூலம் இரு மடங்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதனால், கேரள மாநிலத்தில் மற்ற பயிர்களை விட ரப்பர் மரங்கள் வளர்க்கும் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 

அதனால், தமிழகத்திலும் மலை கிராம விவசாயிகளின் பார்வை, ரப்பர் மரங்களின் மீது விழுந்துள்ளது. கல்வராயன் மலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயி ஒருவர் சோதனை முறையில் பயிரிட்ட ரப்பர் மரங்கள் நன்கு வளர்ந்து, 'ரப்பர் பால்' அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. விவசாயி, ரப்பர் பயிரிட்ட நிலப்பகுதி வனத் துறைக்குச் சொந்தமானதெனக் கூறி, அந்த மரங்களை வனத் துறையினர் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கல்வராயன் மலை கிராமங்களிலும் ரப்பர் மரங்கள் நல்ல வளர்ச்சி அடைவது தெரியவந்துள்ளதால், கல்வராயன் மலை கிராம விவசாயிகளுக்கும், எஸ்டேட் உரிமையாளர்களுக்கும், ரப்பர் பயிரிட்டு உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

அதனால், ரப்பர் வளர்ச்சி கழகம் கல்வராயன் மலை கிராமங்களை ஆய்வு செய்து, ரப்பர் வளர்ச்சிக்கு உகந்த கிராமங்களை இனங்காணவும், அரசு மானியம் வழங்கி, ரப்பர் பயிரிடுவதற்கு உரிய வழிமுறைகளை தந்து ஊக்குவித்து, ரப்பர் உற்பத்தியில் கல்வராயன் மலையை குட்டி கேரளமாக மாற்ற வேண்டுமென, அப் பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வனத் துறையினர் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுகுறித்து கல்வராயன் மலை கிராம விவசாயிகள் கூறியது:
சேர்வராயன் மலை, நீலகிரி மலை கிராமங்களை ஒப்பிடும்போது, கல்வராயன் மலை கிராம விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி நிலை குறைவாகவே உள்ளது. காபி, ஏலக்காய், தேயிலை போன்ற வாசனை திரவிய பயிர்கள், ரப்பர் போன்ற நீண்டகால பலன் தரும் மரப் பயிர்களாக இல்லை என்பதுதான். 

கல்வராயன் மலை கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதார நிலையையும் உயர்த்திடவும், தொடர் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்திடவும், ரப்பர் போன்ற கூடுதல் வருவாய் ஈட்டிக்கொடுக்கும் மரங்கள் வளர்ப்பு குறித்து ஆய்வு செய்து, மானியத்துடன் ரப்பர் வளர்க்கும் வழிமுறைகளைச் செய்து கொடுத்து ஊக்கமளிக்க, ரப்பர் வளர்ச்சி கழகம் அமைக்க மாநில அரசும் முன்வர வேண்டும்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT