சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதி ஜவுளித் தொழிலில் மிளிர தாராளமான மின் வசதி தேவை என அப் பகுதி ஜவுளித் தொழில்முனைவோர் வேண்டுகின்றனர். இப்போதே 120 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தடையில்லா மின்சாரம் கிடைத்தால் 1,000 தொழிற்கூடங்கள் அடுத்த சில மாதங்களில் உருவாகும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பின்தங்கிய பகுதியாக அறியப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு இது ஒரு பிரம்மாண்டம்.
சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குப் பகுதி சிட்லிங். தருமபுரி மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லையில் உள்ளது. அருகேயே சேலம், விழுப்புரம் மாவட்ட எல்லைகள் உள்ளன. ஒரே ஊராட்சியாக உள்ள சிட்லிங் பகுதியில் மலையாளி பழங்குடியினரும் (எஸ்டி), லம்பாடிகளும் (எம்பிசி) கணிசமாக வசிக்கின்றனர்.
மலைக் கிராமங்கள் என்பதால், விவசாயத்தைத் தாண்டி வேறெந்தத் தொழிலும் இங்கே இல்லை. இங்கிருந்து பிழைப்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்றவர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருப்பூரில் ஜவுளித் தொழிலில் தனியாக தொழிற்கூடங்களை அமைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். கூடுதலாக கூலிக்கு வேலை செய்வோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்.
இந்தச் சூழலில், ஏ.கே. தண்டா, மேல் தண்டா போன்ற லம்பாடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தற்போது ஜவுளித் தொழிற்கூடங்கள் மெல்ல வளரத் தொடங்கியுள்ளன. இவ்வாறாக, தற்போது மட்டும் 120 சிறிய தொழிற்கூடங்கள் இங்கே வளர்ந்திருப்பதாகக் கூறுகிறார் ஏ.கே. தண்டாவைச் சேர்ந்த கே. தினகரன்.
கேரள மக்கள் பயன்படுத்தும் வெள்ளை நிற வேட்டி, புடவைகள் இங்கே நெய்யப்படுகின்றன. இதற்கான நூல் திருச்செங்கோட்டில் வாங்கி வருகிறோம். 12 தறிகளைக் கொண்ட சிறிய அளவிலான தொழிற்கூடத்தில் நாளொன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வருமானமாகக் கிடைக்கிறது. ஆள் கூலியும், மின்சாரச் செலவும் ரூ. 2 ஆயிரம் போக வருமானம் ரூ. 4 ஆயிரம் மிஞ்சுகிறது என்கிறார் தினகரன்.
எங்களுக்கு தடையில்லாத, உயர் அழுத்த மின்சாரம் கிடைத்தால் தற்போதுள்ள தொழிற்கூடங்களின் எண்ணிக்கை அடுத்த சில மாதங்களிலேயே ஆயிரத்தைத் தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தினகரன்.
மேலும், தொழிற்கூட மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். ரூ. 10 லட்சம் செலவு செய்து தொழிற்கூடத்தை அமைத்து விட்டு கடந்த 3 மாதங்களாக மின் இணைப்புக்காகக் காத்திருக்கிறார் ஏ.கே. தண்டாவைச் சேர்ந்த ஆர். மாதவன். டீசல் கொண்டு இயக்கப்படும்போது கூடுதல் செலவு ஏற்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அரூர் செயற்பொறியாளர் பூங்கொடியிடம் கேட்டபோது, அவர் கூறியது:
தொழிற்கூடத்துக்கான மின் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் மீது வழக்கமாக தாமதம் செய்வதில்லை. குறிப்பிட்ட புகார்கள் இருப்பின் உடனடியாக சரிசெய்யப்படும்.
தடையில்லாத மற்றும் உயர் அழுத்த மின் இணைப்புக்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். 33 கேவி துணை மின் நிலையம் அமைப்பதற்காக சிட்லிங் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் இடம் கோரப்பட்டுள்ளது.
வேலனூர், சிட்லிங், சூரநத்தம் ஆகிய கிராமங்களில் இடம் கேட்டுள்ளோம். இடம் கிடைத்தவுடன் மிக விரைவில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என உறுதி தெரிவிக்கிறார் பூங்கொடி.
கடந்த 2015ஆம் ஆண்டிலேயே சிட்லிங் பகுதியைச் சேர்ந்த ஜவுளித் தொழில்முனைவோர் தருமபுரி வந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திச் சென்றிருக்கிறார்கள்.
சேலம் செல்லும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் இவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது. மெல்லிய நூலை பத்திரமாக எடுத்து வராவிட்டால், தரமான துணி கிடைக்காது என்றும் இந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநில அரசு தனிக் கவனம் செலுத்தினால், போதுமான அளவு இட வசதியும், ஆர்வமுள்ள இளைஞர்களையும் கொண்ட சிட்லிங் பகுதி திருப்பூர், கோவைக்கு ஈடாக பெரும் ஜவுளி நகராக மாறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.