தமிழ்நாடு

அக். 4-ல் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்: வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக் குழு முடிவு

DIN

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தமிழகத்தில் அக். 4-ஆம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்குழுவின் நிர்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த குழுத் தலைவர் பி. திருமலைராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிபதியாக இருந்த ஜெயந்த் படேல் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அக். 9-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த இடத்துக்கு நீதிபதி ஜெயந்த் படேல் பதவி உயர்வு பெற்று அக். 10-ம் தேதி பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அவரை திடீரென்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பு, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தது. அங்கு அவர் மூன்றாவது நீதிபதியாகப் பொறுப்பேற்கும் விதமாக மாற்றப்பட்டிருக்கிறார்.
இச்செயலைக் கண்டித்து, ஜெயந்த் படேல் ஏற்கெனவே பணியாற்றிய குஜராத்தில் உள்ள வழக்குரைஞர் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர். இதேபோல, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் கர்நாடக மாநில வழக்குரைஞர் சங்கத்தினர் அக். 4-ம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்குமாறு வழக்குரைஞர்களைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் திருமலைராஜன். கூட்டத்தில் குழுச் செயலர் எம்.ஆர்.ஆர். சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT