கொலைவழக்கில் தொடர்புடையவரை பிடிக்கமுயன்ற போது துப்பாக்கிச்சூடு: 2 போலீசார் காயம்
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (45). இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ளன.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (45). இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர் இன்று அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று முத்துகுமாரை பிடிக்க முயன்றனர். அப்போது அவரிடம் இருந்த அரிவாளால் இரண்டு போலீசாரை வெட்டி விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் முத்துகுமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், இடது காலில் குண்டு அடிபட்டு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு செய்தி கேட்டதில் ஏராளமானோர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். பின்னர், இரண்டு போலீசார் உட்பட மூவரையும் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.