தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலித்த 14 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

DIN

அதிக கட்டணம் வசூலித்த 14 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 11, 645 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில், இதுவரை 5 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதிகாரிகள் உதவி செய்து வந்தனர். ஆனாலும், கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இந்தப் புகாரின் அடிப்படையில், திங்கள்கிழமை நள்ளிரவு கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியது:
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 33 குழுக்கள், சென்னையில் மட்டும் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து நிறுவனங்கள் மீது புகார்கள் வந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்து 14 பேருந்து மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 பேருந்து நிறுவனங்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை அந்தந்த பயணிகளுக்கு திருப்பி கொடுத்துள்ளன. இது தவிர, வேறு எந்தெந்த ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஞாயிற்றுக்கிழமை 1லட்சத்து 52,000 பேரும், திங்கள்கிழமை 1 லட்சத்து 88,000 பேரும் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். செவ்வாய்க்கிழமை பயணம் செய்தோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினர். வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேட்டிற்கு எந்த நேரத்திற்கு வந்தாலும் செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதி இல்லை என்று கூறாத அளவிற்கு அனைத்து பகுதிகளுக்கும் அதன் தேவையறிந்து, உடனுக்குடன் பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டி விடக்கூடும் என்பதால் சி.டி.சி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் பேருந்து நிலையம் முழுவதும் ஆண்-பெண் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கும்போது கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அவற்றை குறைப்பதற்காகத்தான் 5 பகுதிகளாக பிரித்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இதனால் கோயம்பேடு 100 அடி சாலையில் நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், பெருங்களத்தூர் முதல் ஊரப்பாக்கம் வரை கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், செங்குன்றம், வானகரம், சூரப்பட்டு, செங்கல்பட்டு ஆகிய சுங்கசாவடிகளில் பல மணி நேரம் வாகனங்கள் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பேருந்துகள் கூடுவாஞ்சேரி, செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூரை கடக்க 5 மணி நேரத்திற்கு மேலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT