முகப்பு
தமிழ்நாடு

பொறையாறு பணிமனை கட்டட விபத்து: தலைவர்கள் கண்டனம்

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு போக்குவரத்துப் பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு போக்குவரத்துப் பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: பொறையாறு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏற்கெனவே அந்த மேற்கூரை பழுதாகியுள்ளது என்று திமுக தொழிற்சங்கத்தினர் புகார் கொடுத்தும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கெல்லாம் அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): கோயம்புத்தூர் அருகே சோமனூரில் புதிய பயணிகள் மேற்கூரை இடிந்து உயிர் பலி ஏற்பட்ட சில நாள்களுக்குள், நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் புதிப்பிக்கப்படாத பணிமனை ஓய்வறை கட்டடம் இடிந்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதற்கு, நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): போக்குவரத்துக் கழகத்தின் இந்தப் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்த தொழிலாளர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): விபத்துக்குள்ளான பணிமனைக் கட்டடம் 1943-இல் கட்டப்பட்டது. சுமார் 75 ஆண்டுகள் ஆனதாலும், தொடர் அதிர்வுகளாலும் கட்டடம் பலவீனமடைந்திருந்தது. கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து ஆய்வு செய்த நிர்வாகம் கட்டடம் வலிமையாக இருப்பதாகவும், அதனால் ஆபத்து இல்லை என்றும் சான்றிதழ் அளித்தது. இதன் பின்னணியில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர்தான் இந்தக் கொடிய விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணம். 
ஜி.கே.வாசன் (தமாகா): பணிமனையைப் பராமரிக்காமல் இருந்ததற்கு அரசு போக்குவரத்துத் துறையின் மெத்தனப்போக்கே காரணம். இந்தச் சம்பவம் நடந்ததற்கான காரணத்தைக் கண்டறிய உடனடி விசாரணை நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): பல ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், வலுவிழந்து இருந்தபோதும், அதனை மராமத்து செய்யாமல் ஓய்வறையாகப் பயன்படுத்த அனுமதித்தது வேதனைக்குரியது. இந்த விபத்துக்கு பொறுப்பேற்று தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்.
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): கடந்த மாதம் கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழகமெங்கும் போக்குவரத்துக்
கட்டடங்கள் தொடர்பாக பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்காததன் விளைவுதான் பொறையாறு பணிமனை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள். இந்தச் சம்பவம் கண்டிக்கத்தக்கது.
டிடிவி தினகரன் (அதிமுக அம்மா அணி): பாகுபாடு இல்லாமல் அனைத்துத் துறைகளுக்கும் போதிய நிதியை ஒதுக்க வேண்டும். கடந்த மார்ச்சில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நேரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னைச் சந்தித்தார். அப்போது, முதல்வர் மற்றும் அவரைச் சார்ந்த ஒரு சில அமைச்சர்களின் துறைகளுக்கு மட்டுமே போதிய நிதி ஒதுக்கப்படுகிறது என குறைபட்டார். அன்று அவர் சொன்ன குறை இப்போது வரை நிவர்த்தி செய்யப்படவே இல்லை என்பது தெரிய வருகிறது. முதல்வரும் துறையின் அமைச்சரும் உரிய நிதியை அந்தத் துறையின் பராமரிப்புக்கும், வளர்ச்சிக்கும் வருவதை உறுதி செய்திட வேண்டும். பொது மக்கள் பெரிதும் பயன்படுத்தும் துறைக்கு குறை இல்லாத வகையில் நிதியை சுயநலனுக்கு அப்பாற்பட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் சு.துரைசாமி: பொறையாறு போக்குவரத்து பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →