தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: அக்.25 -இல் தொடக்கம்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி புதன்கிழமை (அக். 25) தொடங்கவுள்ளார். இதற்காக, சென்னை சேப்பாக்கம் எழிலக கட்டடத்தில் உள்ள கலச மஹாலில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையை தயார் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனை அவர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று கடந்த ஆகஸ்ட் 17 - ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீதி விசாரணைக்கான தலைவர் நியமனம் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் 25 -ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு 
வெளியிட்டது. 
வரும் 25 -ஆம் தேதி முதல்... இந்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை ஆணையத்துக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மகாலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர்களிடம் நடத்தப்படும் உரையாடல்கள் வெளியே கேட்டு விடாதபடி , விசாரணை நடைபெறும் அறைக்குள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விசாரணை ஆணையத்துக்குத் தேவையான அறைகளை தயார் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி வரும் புதன்கிழமை (அக்.25) முதல் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரண-காரியங்கள்: ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்பட காரணங்கள் என்ன, அவருக்கு உடல்ரீதியாக இருந்த பிரச்னைகள், மருத்துவமனையில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொள்ளும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்ஸ அங்கு சிகிச்சையின்போது உடனிருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக இருக்கக் கூடும் எனவும், அதன் பிறகு தேவைப்பட்டால் கால நீட்டிப்பு செய்யப்படும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT