தமிழ்நாடு

தமிழக அரசின் நிவாரணம் பெரிதல்ல; நீட் தேர்வுக்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

தமிழக அரசின் நிவாரணம் பெரிதல்ல; நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் ஆட்சியர் க.லட்சுமிபிரியாவிடம் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமைத் தூக்கும் தொழிலாளி சண்முகம் மகள் அனிதா(17). பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்த இவருக்கு, நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியினால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.7 லட்சம் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், அரசின் நிவாரணத் தொகையை வழங்குவது தொடர்பாகவும், அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), எம்.பி. மா.சந்திரகாசி (சிதம்பரம்) ஆகியோர் அனிதாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த அனுமதி அளிக்கவும் அனிதா குடும்பத்தினரிடம் அரியலூர் ஆட்சியர் க.லட்சுமிபிரியா ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசின் நிவாரணத்தை கலந்தாலோசனைக்கு பிறகு பெற்றுக் கொள்வதாகவும், குன்னம் எம்.எல்.ஏ. மற்றும் சிதம்பரம் எம்பி ஆகியோர் அனிதாவுக்கு மரியாதை செலுத்த அனிதா குடும்பத்தினர் இசைவு தெரிவித்தனர். இதையடுத்து, மாணவி அனிதா படத்துக்கு குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமசந்திரன், சிதம்பரம் எம்பி மா.சந்திரகாசி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குன்னம் எம்எல்ஏ ஆர்.டி ராமசந்திரன் பேட்டி: ஏற்கெனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு பெற்று தந்தார்.
தற்போதும் தமிழக அரசு உச்சக்கட்டம் வரை சென்று நீட் விலக்குக்கு முறையிட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனிதாவை மாற்று பாதையில் கொண்டு சென்றுவிட்டது. உச்சநீதிமன்றம் வரை அனிதாவை கொண்டு சென்றவர்கள் தீர்ப்புக்கு பின் அனிதாவுக்கு உரிய ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும்.நீட் விலக்கு என்பது சாத்தியமில்லை.
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. நீட்டை விலக்கிடுவோம் என சிலர் அரசியல் செய்கின்றனர். இனி வரும் காலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றார் அவர்.
அனிதாவின் அண்ணன் மணிரத்னம் பேட்டி: அரசு வழங்கும் நிதியை தற்போது பெற்று கொள்வது எனது தங்கையின் மரணத்தை இழிவுபடுத்தும் செயலாகும். என் தங்கையின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். இதற்காக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனிதாவின் இறப்புக்கு பிறகு தமிழ்வழியில் பயின்ற, ஏழை மாணவர்கள் 4 பேர் மருத்துவர் ஆனோம் என சொல்லும் அந்த ஒருவார்த்தை எங்களுக்கு போதும் என்று ஆட்சியரிடம் தெரிவித்தேன். இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் கூறினார் என்றார் மணிரத்னம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT