தமிழ்நாடு

புதுச்சேரி விடுதியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்

DIN

புதுச்சேரி அருகே தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் தங்களது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். தற்போது 9 பேர் மட்டுமே விடுதியில் உள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் புதுச்சேரி அருகேயுள்ள சின்ன வீராம்பட்டினம் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், 2 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து புதுவை வந்தனர். அதேசமயம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக கடிதம் அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையே, டிடிவி தினகரன் சொகுசு விடுதிக்கு சனிக்கிழமை வந்து அனைத்து எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார்.
தொகுதிப் பணிகளை கவனிக்காமல் தொடர்ந்து 12 நாள்களாக புதுச்சேரியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கின.
மேலும், புதுச்சேரி சொகுசு விடுதி மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு தொடர்ச்சியாக இடம் தர மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். தற்போது 9 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே விடுதியில் உள்ளனர்.
சொந்த ஊருக்குச் சென்ற எம்.எல்.ஏக்கள், அங்கு பணிகளை முடித்த பிறகு சில நாள்களில் புதுச்சேரிக்கு திரும்புவர் என அவர்கள் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT