தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் கைதான கல்லூரி மாணவி வளர்மதி விடுதலை!

நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களின் காரணமாக கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்ப்பட்டதனைத் தொடர்ந்து, அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்  

DIN

கோவை: நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களின் காரணமாக கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்ப்பட்டதனைத் தொடர்ந்து, அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்  

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வழங்கி பொதுமக்களை தூண்டி விட்டதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் சேலம் காவல்துறை ஆணையர் கடந்த ஜூலை 17 ஆம் தேதி வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தன் மகள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி வளர்மதியின் தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடி வரும் பொதுமக்களுக்காக தனது மகளும் போராடினாள். பழிவாங்கும் ஒரே நோக்கில் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன் மகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சட்டத்திற்கும், உண்மைக்கும் புறம்பானது. எனவே வளர்மதி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது பல்வேறு சட்ட ரீதியிலான நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஆனால் மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தில் அதுபோல எந்த சட்ட விதிமுறைகளையும் போலீஸார் பின்பற்றவில்லை. அவசரகதியில் வளர்மதி மீது குண்டர்தடுப்புச் சட்டத்தை பிரயோகம் செய்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தபோது அவரது பெற்றோருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. தனது மகளை விடுவிக்கக்கோரி அவரது தந்தை கொடுத்த மனுவுக்கும் போலீஸார் காலதாமதமாகவே பதிலளித்துள்ளனர்.

எனவே சட்ட நடவடிக்கைகளை மீறி மாணவி வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பிறப்பிக்கப்பட்டஉத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவானது முறைப்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து சிறை நடைமுறைகளுக்குப் பிறகு மாணவி வளர்மதி இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT