தமிழ்நாடு

சம்பாவுக்குத் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையைத் திறப்பதே சிறந்தது: தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை

நிகழாண்டு சம்பா சாகுபடிக்குத் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையைத் திறப்பதே சிறந்தது என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

தினமணி

நிகழாண்டு சம்பா சாகுபடிக்குத் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையைத் திறப்பதே சிறந்தது என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

தஞ்சாவூரில் இக்குழுவினர் பரிந்துரை கையேட்டை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் குழுவைச் சேர்ந்த வ. பழனியப்பன் உள்ளிட்டோர் தெரிவித்தது:
கடந்த 12 ஆண்டுகளாக மேட்டூர் அணைப் பாசனப் பகுதி பயிர் சாகுபடி குறித்தும்,  நீர் வழங்கல் திட்டம் பற்றியும் பரிந்துரைகளைக் கையேடு வடிவில் தயாரித்து அரசுக்கு ஜூன் மாதத்தில் அனுப்புவது வழக்கம். பல ஆண்டுகளில் எங்களுடைய பரிந்துரைப்படி மேட்டூர் அணைத் திறக்கப்பட்டது.

நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை எதிர்பார்த்ததற்கு மாறாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான வேநாடு,  குடகுப் பகுதியில் குறைவாகவே மழை பெறப்பட்டது. மேலும்,  தமிழகத்துக்கு உரிய நீர் பெற அரசுகள் தவறின. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் கிடைக்கப் பெறவில்லை. இப்போது,  பெங்களூருவில் பெய்கிற மழை நீரே மேட்டூருக்குக் கிடைத்து வருகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து கிடைக்கவில்லை.

எனவே, தற்போது இருப்பில் உள்ள நீர் அளவையும்,  வரத்தின் அளவையும் கவனிக்கும்போது உடனடியாக அணையைத் திறப்பது சிறந்ததாகக் கருத முடியாது. எனினும்,  காவிரி படுகையில் வடகிழக்குப் பருவமழை இரண்டாவது ஆண்டாகப் பொய்க்க வாய்ப்பில்லை. இயல்பான அளவுக்கு மழை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால், நிகழாண்டில் காவிரிப் படுகையில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளது. இச்சூழலில் காவிரி படுகைப் பகுதியில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட வேண்டியது அவசியம். என்றாலும், சம்பா பருவத்தில் மத்திய கால விதை நெல் ரகங்களைப் பயன்படுத்தி நேரடி விதைப்பு செய்வதே சிறந்தது.

வடகிழக்குப் பருவமழையால் பூக்கும் பருவத்தில் பாதிக்காத வகையிலும், ஜனவரிக்கு பிறகு நீர் தட்டுப்பாடு இன்றி அறுவடையை மேற்கொள்ளவும் மத்திய கால ரகங்களை செப்டம்பர் மாதத்துக்குள் விதைத்தல் நல்லது. மேலும் சம்பா நெல் சாகுபடியை நாற்று விட்டு நடவு செய்ய போதிய அணை நீர் கிடைக்காது என்ற நிலை உள்ளது. எனவே, நீர் தேவையைக் குறைத்து நல்ல மகசூல் பெற அனைத்து விவசாயிகளும் நேரடி நெல் விதைப்பு முறை மேற்கொள்வது சிறந்தது.

காவிரி படுகையில் தற்போது பெய்யும் மழையைப் பயன்படுத்தி செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து பரப்பிலும் நேரடி நெல் விதைப்பை முடிக்க வேண்டும்.

மேட்டூர் அணையைத் தற்போது திறப்பது சிறந்ததாகாது. அணையில் பெறப்படும் நீரைச் சேமித்து பயிரின் முக்கிய பருவத்தில் தேவைப்படும் காலத்தில் அவ்வப்போது அணையைத் திறந்து பயன்படுத்துவதே சிறந்தது.

எனவே, மேட்டூர் அணையில் நீரைச் சேமித்து வைக்கவும், சம்பாவில் விவசாயிகள் நாற்றுவிட்டு நடவு செய்வதைத் தவிர்த்து அனைவரும் நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொண்டு நிகழாண்டில் நல்ல மகசூல் பெறவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றனர்.

அப்போது, விதை சான்றுகள் துறை முன்னாள் இயக்குநர் பி. வெங்கடேசன், மூத்த வேளாண் வல்லுநர் பேரவையின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், செயலர் இளஞ்செழியன், பொருளாளர் பாலையன், முன்னாள் செயலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் Dileep விடுதலை! | Shorts

போட்டி வேறு, உறவு வேறு! பாராட்டுகளைப் பெறும் ப்ரஜின் - விஜய் சேதுபதி நட்பு!!

150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு இன்ப அதிர்ச்சி!

காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT