தமிழ்நாடு

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் பாஜக சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அவர் பேசியது: அரசியல் சூழ்ச்சிகளால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனிதாவின் மருத்துவப் படிப்பு தடுக்கப்படவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிகளில் கொட்டி மருத்துவம் படிப்பது மட்டுமே தடுக்கப்பட்டிருக்கிறது.
நீட்டுக்கு ஏற்கெனவே ஓராண்டுக்கு விலக்கு கொடுத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அதற்கு விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, சென்னை வந்திருந்தபோது திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
தமிழக பாஜக சார்பில் நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பாஜக சார்பில் நீட் தேர்வுக்கு ஆதரவாக செப். 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்: அனிதா சாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு லாயக்கற்றவர்கள் எனக் கூறி நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கின்றனர். நீட் தேர்வு காங்கிரஸால் அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு 100 இல் 85 சீட் தமிழகத்துக்கே கிடைக்கின்றது. தலித் இடத்தில் தலித், பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் அவர்களுக்கே உரிய இடம் கிடைக்கின்றது. பின்னர் ஏன் சமூக நீதி செத்து விட்டதாக கூறி போராட்டம் நடத்த வேண்டும் ? என்றார்.
தேசிய செயலர் எச். ராஜா : 2017-18ல் மாணவர் சேர்க்கை நீட் அடிப்படையில் தான் நடக்கும் என சென்ற ஆண்டே கூறியது அரசு. 88,000 பேர் தேர்வு எழுதியதில் 33,000 பேர் தேர்வு பெற்றனர். ஆனால், 4,000 பேருக்குத்தான் இடமுள்ளது, இதில் தேர்வான பலருக்கே இடம் கிடைக்காதுதான். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன்? அனிதா விவகாரத்தில் விசாரணை கேட்கவில்லை. அனிதாவின் மரணம் தூண்டப்பட்டதே என்பதே எனது கருத்து. நீட் தேர்வு மூலம் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கடந்தாண்டை விட அதிமாகியுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT