தமிழ்நாடு

சசிகலாவுடன் சந்திப்பு: முதல்வர், 4 அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

DIN


மதுரை: வி.கே. சசிகலாவை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட வி.கே. சசிகலாவின் ஆலோசனைகளைப் பெற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களும் இன்று பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த பதில் மனுவை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது.

அந்த பதில் மனுவில், சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே பெங்களூர் சிறைக்குச் சென்றோம், ஆட்சி நிர்வாகம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கவில்லை என்று 4 அமைச்சர்களும் விளக்கம் அளித்திருந்தனர். 

பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட ரகிசய காப்பு மற்றும் பதவிப் பிரமாணத்துக்கு எதிராக செயல்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் கூறப்பட்டது.

சசிகலாவின் தலைமையில் அரசு வழிநடத்தப்படும் என கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரி சங்கர் கூறிய கருத்து அவரது சொந்த கருத்து என்றும், அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளக்கத்தை ஏற்று, முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதியிழக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.

வழக்கின் பின்னணி: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டி. ஆணழகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தாற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கட்சியின் பொதுச் செயலராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கௌரிசங்கர், சசிகலாவின் ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் தமிழக அரசு வழிநடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, கௌரிசங்கரின் இந்தப் பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் கூறியிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் ஆலோசனைப் படி இயங்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இந்தச் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை எம்எல்ஏ-க்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவைச் செயலருக்கு மனு செய்திருந்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை.

எனவே எனது மனுவின் அடிப்படையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை எம்எல்ஏ-க்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT