தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியில் நீடிக்கும் போராட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர் வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த 7ஆம் தேதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக வியாழக்கிழமை விடிய விடிய காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆண்கள், பெண்கள் இணைந்து அவர்களே மதிய உணவு தயாரித்தனர். இரவு காத்திருப்புப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில்... தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் பணிகள் கடந்த 7 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதன்கிழமை தொடங்கினர். இருப்பினும், மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து இரவில் விடுவித்தனர்.
இதற்கிடையே, இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை காலை தொடங்கினர்.
போராட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் பவுல்ஆபிரகாம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலர் சுப்பிரமணியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் ஹென்றி ஆகியோர் தலைமை வகித்தனர்.
காத்திருப்புப் போராட்டத்தை ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலர் மயில் தொடங்கிவைத்துப் பேசினார்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.


மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ஜெயபால், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழரசன், ஊரக வளர்ச்சி முகமை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திரபிரபு, "மூட்டா' நிர்வாகி சிவஞானம், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பூசைத்துரை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இரவும் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே உணவு தயாரித்து வழங்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் அவர்கள் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT