தமிழ்நாடு

தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர்வு: கே.பாண்டியராஜன்

DIN

தமிழகத்தில் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த அளவைவிட இரு மடங்கு அதிகம் என தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
தேசிய மனிதவள மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.எம்) சார்பில் ""நேட்கான் 2017-' என்ற தேசிய அளவிலான மனிதவள மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது உயர் கல்வித் துறையில் அரசு, தனியார் கூட்டு பங்களிப்பு (பி.பி.பி.) நடைமுறையை அறிமுகம் செய்தார். இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், எம்.ஜி.ஆர். மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தமிழகம் இன்று இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.
உதாரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 22 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
அதுபோல, பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம், இன்று நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தை ஆண்ட அரசர்கள், குடிமராமத்துப் பணிகளை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தினர். இன்றும் நாம் அதைப் பின்பற்றி வருகிறோம். இப்போது தமிழக அரசின் உத்தரவின் பேரில் 2000 நீர் நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுபோல, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் பல்வேறு இடையூறுகள், சவால்கள் அதிகரித்து வருகின்றன. இதனை, மனிதவள மேம்பாட்டுத் துறையினர் திறமையாக எதிர்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இப்போது, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT