தென்மாவட்ட சிறப்பு ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து இயக்கம்?
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களை இனி தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களை இனி தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய இரண்டு ரயில் முனையங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, தாம்பரத்தில் 3 -ஆவது ரயில் முனையமும், ராயபுரத்தில் 4 ஆவது ரயில் முனையம் அமைக்க 2012-ஆம் ஆண்டு ரயில்வே துறை முடிவு செய்தது. இதில், தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மேம்படுத்தும் பணிகள் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தன. இதையடுத்து சோதனை அடிப்படையில், குவாஹாட்டி விரைவு மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் ஆகஸ்ட் 7 மற்றும் 9 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன. இந்தச் சோதனைக்குப் பின்னர் எந்தெந்த ரயில்கள் தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்ற ஆலோசனையில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
தென் மாவட்ட சிறப்பு ரயில்கள்: தாம்பரம் ரயில் முனையத்திலிருந்து செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் வரும் 30 -ஆம் தேதி வரை செங்கோட்டைக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது தெற்கு ரயில்வே. தாம்பரம் ரயில் நிலையம் முனையமாக்கப்பட்டபின், நேரடியாக தென் மாவட்டத்துக்கான முதல் சிறப்பு ரயிலை இயக்குகிறது ரயில்வே நிர்வாகம். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. இந்த ரயில் பகல் நேரத்தில் இயக்கப்படுவதால் இதற்கான வரவேற்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்தச் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதால் காலியாக இருக்கிறதா அல்லது பகல் நேர ரயில் என்பதால் காலியாக இருக்கிறதா என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. இனி பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்களைதாம்பரத்தில் இருந்து இயக்கவே தெற்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.
இடப் பற்றாக்குறை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்களுக்கான அறிவிப்பு வந்து பல ஆண்டுகளாகிவிட்டன. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் இடப் பற்றாக்குறை இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலைத்திலிருந்து இயக்கப்பட்ட மும்பை -காக்கிநாடா போன்ற ரயில்கள் எழும்பூரில் இருந்தும், செங்கல்பட்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன. இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் தமிழகத்துக்கு அதிக ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தென் தமிழகத்துக்கான புதிய ரயில் அறிவிப்புகள் இல்லாமல் போய்விடுகின்றன.
வடசென்னை மக்களின் விருப்பம்
தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையிலிருந்து தாம்பரம் 26 கி.மீ., தூரத்தில் உள்ளதால், வடசென்னை மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல தாம்பரம் வரை போக விரும்பவில்லை. எனவே, வடசென்னை பகுதியிலேயே ஒரு முனையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே வடசென்னைவாசிகளின் நீண்டகால விருப்பமாக உள்ளது.
இதுகுறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.சூசைராஜ் கூறியது: சென்னையிலிருந்து 26 கி.மீ. தொலைவுள்ள தாம்பரத்தில் ரயில் முனையம் அமைத்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களை அங்கிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இதனால் மத்திய சென்னை, பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், ராயபுரம், திருவொற்றியூர், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் போன்ற பகுதிகளிலிருந்து தென்மாவட்டம் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, திருவனந்தபுரம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை எழும்பூரில் இருந்து தொடர்ந்து இயக்க வேண்டும்.
இதற்கு வசதியாக தண்டையார்பேட்டையில் உள்ள 111 ஏக்கர் ரயில்வே நிலத்தை பயன்படுத்தி, விரைவில் அங்கு ரயில் முனையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அதிக ரயில்களை இயக்க முடியும். வடசென்னை பகுதியும் வளர்ச்சியடையும். ஏற்கெனவே, ராயபுரம் ரயில் நிலையத்தை இழந்துவிட்ட நிலையில், எழும்பூர் ரயில் முனையத்தையும் இழந்துவிடுவோமா என்ற அச்சம் தற்போது பயணிகள் மத்தியில் உள்ளது என்றார் சூசை ராஜ்.
இந்த நிலையில், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.