பண மதிப்பிழப்பும் , ஜி.எஸ்.டி.யும் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டன
பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், உடனடி ஜிஎஸ்டி வரி அமலும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், உடனடி ஜிஎஸ்டி வரி அமலும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென்னிந்திய வர்த்தக சபை நடத்திய கருத்தரங்கு, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் மேலும் பேசியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் பின் உடனடியாக ஜிஎஸ்டி வரிமுறையை நாடு முழுவதும் அமல்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொழில்முனைவோர் மீள்வதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டன. பலர் இன்னமும் மீளமுடியாத நிலையில் இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தியது, சிறு, குறு தொழில் முனைவோரை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி செய்பவர்கள் கடுமையான பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஏற்றுமதிக்கு முக்கிய பங்குண்டு. தற்போது அது மெதுவாக சரிந்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. இதனை மத்திய அரசு உடனடியாக கவனித்து சரி செய்ய வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகள் பொருளாதார நிலை கடும் சவாலை சந்திக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. இந்தப் பொருளாதார நிலை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பே சீராகும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.