தமிழ்நாடு

நவராத்திரி பண்டிகை பூக்கள் விலை இருமடங்கு உயர்வு

DIN

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. 
சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, சத்தியமங்கலம், ஓசூர், திருவள்ளூர் உள்பட பல பகுதிகளிலிருந்து தினமும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்தப் பூக்களை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். 
கடந்த வாரம் கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் வரத்து சற்று அதிகமாக இருந்ததால் மொத்த விலையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.200, முல்லை ரூ.160, ரோஜா - ரூ.45, அரளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (செப்.22) நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.450 -ஆக விலை அதிகரித்தது. இதேபோன்று அனைத்து பூக்களின் விலையும் இருமடங்கு உயர்ந்து காணப்பட்டது. மொத்த விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் சில்லறை விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த வாரம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையான ஒரு முழம் மல்லிகை தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கப்படுகிறது. 
இதுகுறித்து கோயம்பேடு பூ விற்பனை சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் அருள் விசுவாசம் கூறுகையில், 'கடந்த சில நாள்களாக ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு கொண்டுவரப்படும் பூக்களின் வரத்து வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. 
மேலும் அடுத்த வாரம் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதையொட்டி பூக்களுக்கான ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் பூக்கள் கிடைக்காதது கவலையளிக்கிறது. வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் அவற்றின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார் அவர். 
கோயம்பேடு சந்தையில்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பூக்களின் விலை விவரம் (கிலோவில்; பழைய விலை அடைப்புக் குறிக்குள்):-
மல்லிகை ரூ.450 (200)
முல்லை ரூ.300 (160)
கனகாம்பரம் ரூ.800 (400)
ரோஜா ரூ.80 (45)
சாமந்தி ரூ.120 (65)
சம்பங்கி ரூ.100 (55-60)
அரளி ரூ.170 (90)
செண்டுமல்லி ரூ.30 (15)
கோழிக்கொண்டை ரூ.60 (35)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT