தமிழ்நாடு

திருச்சி, சேலம், கோவை, ஒசூர், சென்னை ஆகிய நகரங்கள் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி கேந்திரங்கள்!

திருச்சி: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமானது தமிழ்நாடு பாதுகாப்புக் கழகம் (Tamil Nadu Defence Quad) என்ற அமைப்பை உருவாக்கி திருச்சி, சேலம், கோவை, ஒசூர், சென்னை ஆகிய நகரங்களை பாதுகாப்புத் துறைக்கான

ஆர். முருகன்

திருச்சி: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமானது தமிழ்நாடு பாதுகாப்புக் கழகம் (Tamil Nadu Defence Quad) என்ற அமைப்பை உருவாக்கி திருச்சி, சேலம், கோவை, ஒசூர், சென்னை ஆகிய நகரங்களை பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி கேந்திரங்களாக (Defence corridor) அறிவித்துள்ளது.


மேக் இன் இந்தியா: இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து மேக் இன் இந்தியா திட்டத்தை 2014 செப்.25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். உலகளவில் இந்தியாவை பெரிய உற்பத்திக் கேந்திரமாக மாற்றி அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.


ஆட்டோமொபைல், வானூர்தி, பயோடெக்னாலஜி, வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், கட்டுமானம், ஏற்றுமதி, சுற்றுலா, ஜவுளி, மரபுசாரா எரிசக்தி, உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, நெடுஞ்சாலை, விண்வெளி, மின்சாரம், கப்பல், சுகாதாரம் என பல்வேறு துறைகளில் மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது. இதில், பாதுகாப்புத்துறையையும் இணைத்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.


புந்தேல்கண்ட் முன்னோடி: பாதுகாப்புத்துறைக்கான தளவாட பொருள்கள், உதிரிபாகங்கள் உற்பத்தியில் வெளிநாடுகளை மட்டுமே நம்பியிராமல் இந்தியாவில் அதற்கான உற்பத்தி வாய்ப்புகளை அளித்து, தொழில்துறை மேம்பாடு, வேலைவாய்ப்பு பெருக்கம், பொருளாதார வளர்ச்சி என மூன்று நிலைகளில் இந்தியாவை முன்னேற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் முன்னோடியாக உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி கேந்திரம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் 5 இடங்கள்: இதேபோல, தமிழகத்திலும் பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி கேந்திரம் அமைக்க 5 இடங்களை தேர்வு செய்துள்ளது மத்திய பாதுகாப்புத்துறை. திருச்சி, சென்னை, ஒசூர், கோவை, சேலம் என 5 இடங்களை பாதுகாப்பு உற்பத்திகேந்திர பகுதிகளாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். திருச்சிக்கு அண்மையில் வந்தபோது தொழில்துறையினரிடம் இதனை தெரிவித்து ஆலோசனைகளையும் கேட்டுள்ளார். தமிழ்நாடு பாதுகாப்புக் கழகம் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. இதில், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர், தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர், ஒசூர், கோவை, சேலம், திருச்சி பகுதிகளுக்கு சென்று தொழில்துறையினருடன் கருத்துகளை கேட்டறிந்துள்ளனர்.

வாய்ப்புகள் என்ன?: தமிழகத் தலைநகரான சென்னையில் 50-க்கும் மேற்பட்ட என்ஜின் தொழிற்சாலைகளும், 200 கனரக வாகன தொழிற்சாலைகளும், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 550-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களும் உள்ளனர். இதேபோல, திருப்பூர், ஈரோடு ஆகியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. திருச்சியில் பிஹெச்எல், படைக்கலத் தொழிற்சாலை உள்ளது. சேலத்தில் கனிமம், மின்சாரம், எஃகு உள்ளிட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஒசூர் ஆட்டோமொபைல் தொழில்துறையின் முன்னோடியாக உள்ளது. எனவே, இந்த தொழிற்சாலைகளையும், தொழில்முனைவோர்களையும் வாய்ப்பாகக் கொண்டு பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி கேந்திரங்களை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உள்நாட்டில் ஆயுத உற்பத்தி: நாட்டின் மொத்த வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியில் பாதுகாப்புத் துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, இறக்குமதியை குறைத்து உள்நாட்டு ஆயுத உற்பத்தி மற்றும் வெடிமருந்துகளை மேம்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறையில் மேக் இன் இந்தியா திட்டம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தனியார்துறை, பொதுத்துறை, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கி உற்பத்தி கேந்திரத்தை சாத்தியமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை-சேலம் தயார்: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி கேந்திரங்களில் முதல்கட்டமாக சென்னை, சேலம் கேந்திரத்தை தயார்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. சேலத்தில் ஆயிரம் ஏக்கரில் ஹெலிகாப்டர் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில்கேந்திரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக செயில் ஆலைக்கு அருகே இடத்தை தேர்வு செய்து தமிழக அரசு வழங்கவுள்ளது. இதபோல, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விமானங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில்கேந்திரத்தை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 300 ஏக்கர் நிலம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சி, கோவை, ஒசூரில் தொடங்கவுள்ள கேந்திரங்களுக்கான வாய்ப்புகளையும் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் கருத்துகளையும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்குள் 5 கேந்திரங்களும் கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

1 லட்சம் பேருக்கு வேலை

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) தலைவர் சி. பாபு கூறியது:
மத்திய பாதுகாப்பு அமைச்சகமானது திருச்சி, கோவை, சேலம், ஒசூர், சென்னை நகரங்களை பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி கேந்திரங்களாக அறிவித்துள்ளது. இதன்படி, முதல்கட்டமாக சேலம் மற்றும் சென்னையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி கேந்திரங்கள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புத்துறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் வாய்ப்பைப் பெறும். புதிய தொழில்முனைவோர்கள் அதிகரிப்பதுடன், சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறு, குறுந்தொழில்களும் வளர்ச்சி பெறும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பாதுகாப்பு கண்காட்சி-2018

மத்திய பாதுகாப்பு அமைச்சகமானது சென்னை அருகே இந்திய பாதுகாப்பு கண்காட்சி-2018ஐ ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தை என்ற இடத்தில் இக் கண்காட்சி நடைபெறுகிறது. 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் ராணுவம், கப்பல்படை, விமானப்படை என முப்படைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறைக்கான தொழில்உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பொருள்களை கண்காட்சியில் இடம்பெறச் செய்யவுள்ளன. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தினர் இக் கண்காட்சியில் பங்கேற்று பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி பொருள்களை தமது பகுதியில் தயாரிக்க ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம் என டான்சியா பொதுச் செயலர் சி.கே. மோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT