முகப்பு
தமிழ்நாடு

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராக போராட்டம் தேவையில்லை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதும், பார்க்காததும் ரசிகர்களின் முடிவை பொறுத்தது, அதற்காக ஆர்ப்பாட்டமோ,

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:29 AM
பகிர்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதும், பார்க்காததும் ரசிகர்களின் முடிவை பொறுத்தது, அதற்காக ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ தேவையில்லை என்பது காங்கிரஸின் கருத்தாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதுகுறித்து உதகையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
காவிரி நதிநீர்ப் பிரச்னை நீண்ட காலப் பிரச்னையாகவே உள்ளது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அண்மையில் வழங்கியதுடன் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மத்திய அரசு மதிக்காதது கண்டனத்துக்குரியதாகும்.
இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சுமத்துவது சரியல்ல. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது கர்நாடகத்திலும் பாஜக ஆட்சிதான் இருந்தது. அப்போது காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்கவில்லை. நர்மதை நதி தொடர்பான பிரச்னை ஏற்பட்டபோதும் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியிலிருந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம்தான் இப்பிரச்னைக்குத் தீர்ப்பளித்தது. 
அதேபோல தற்போதும் காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம்தான் தனது தீர்ப்பின் மூலமாகத் தீர்வு காணமுடியும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து விட்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடக அரசு தவறினால் மட்டுமே அந்த அரசின் மீது குற்றம்சாட்ட முடியும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசே மதிக்காதபோது மாநில அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.
காவிரி பிரச்னைக்காக சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கைகள் கூடாது. காவிரி மக்கள் போராட்டமாகும். ஐபிஎல் போட்டிகள் வேண்டுமா, வேண்டாமா என்பதை அதன் நிர்வாகிகள்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போட்டிகளைப் பார்ப்பதும், பார்க்காததும் ரசிகர்களின் முடிவு என்பதால் அதற்காக ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ தேவையில்லை என்பது காங்கிரஸின் கருத்தாகும். 
தற்போதைய சூழலில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகளின் போராட்டம் தொடரும். இதையடுத்து, தமிழக ஆளுநரை 13-ஆம் தேதி சந்தித்த பின்னரும் இப்பிரச்னையில் தீர்வு ஏற்படாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்களும் தொடரும்.
தமிழகத்தில் அறிவுப் பஞ்சமோ அல்லது அறிவார்ந்த, தகுதியானவர்களுக்கான பஞ்சமோ கிடையாது. அதனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வேறு மாநிலத்தில் இருந்துதான் துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்பதில்லை. மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு வேண்டுமானால் இந்த நியமனங்களை செய்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது தவறானது. இரண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தவறு செய்து விட்டார்கள் என்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேறு மாநிலங்களில் இருந்து துணைவேந்தர்களை நியமிப்பதை ஏற்க முடியாது என்றார்.
பேட்டியின்போது நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர்.கணேஷ், சிறுதேயிலை விவசாயிகள் சங்கத் தலைவர் ஜே.பி.சுப்பிரமணியம், மக்களவை முன்னாள் உறுப்பினர் விஸ்வநாதன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பென்னட் அந்தோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.