வடபழனி பெண் கொலையில் திருப்பம்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கோயில் குருக்கள் கைது
வடபழனியில் பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடியதாக கோயில் குருக்கள் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: வடபழனியில் பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடியதாக கோயில் குருக்கள் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு, ஞானப்ரியாவை காதல் திருமணம் செய்து கொண்ட பாலகணேஷ், மனைவியை படுகொலை செய்துவிட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரத்தில் சுத்தியால் ஞானப்ரியாவை அடித்துக் கொன்றதாகவும் பாலகணேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Advertisement
கடந்த 5ம் தேதி சிவன் கோயிலில் குருக்களாக பணியாற்றி வந்த பாலகணேஷ் என்கிற பிரபுவின் மனைவி ஞானப்ரியா கொலை செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொலைச் சம்பவத்தில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததும், கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்து சிசிடிவி கேமராக்களில் எந்த காட்சியும் பதிவாகாததும் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறைக்கு பாலகணேஷ் மீது சந்தேகத்தை எழுப்பியது.
இதன் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றிருந்த பால கணேஷ் சென்னை திரும்பியதும், காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், உண்மையை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி: வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகணேஷ் (எ) பிரபு (27). இவர் வடபழனி சிவன் கோயிலில் குருக்களாக இருக்கிறார். பிரபுவின் மனைவி ஞானப்பிரியா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன இவர்களுக்கு குழந்தை இல்லை.
வடபழனியில் விஜயலட்சுமி என்பவரின் வீட்டில், வாடகைக்கு பிரபு குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள இந்த வீட்டின் எதிரே உரிமையாளர் விஜயலட்சுமி வசிக்கிறார்.
இந்நிலையில் விஜயலட்சுமி வியாழக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே வந்தபோது, பிரபு வீட்டின் கழிவறையில் இருந்து சத்தம் வந்தது. அதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது, பிரபு உள்ளாடையுடன் கை, கால், கழுத்து துணியால் கட்டப்பட்ட நிலையில் அரை மயக்கத்தில் கிடந்தார். அவரது மனைவி ஞானப்பிரியா, படுக்கை அறையில் தலையில் பலத்த காயத்துடன், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதைக் கண்ட விஜயலட்சுமி, போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், ஞானப்பிரியா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மயக்க நிலையில் கிடந்த பிரபு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர விசாரணை: இச்சம்பவம் குறித்து வடபழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பிரியா அணிந்திருந்த தங்க நகைகளும், பீரோவில் இருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், பிரபு வியாழக்கிழமை அதிகாலை கழிவறைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அங்கு காத்திருந்த இருவர் அவரை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, வீட்டுக்குள் சென்று பிரியாவை தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறியிருந்தார்.
சம்பவம் நடந்ததாகக் கூறும் நள்ளிரவு 1.30 மணியளவில், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருக்கும் எந்த சிசிடிவி கேமராவிலும் கொலையாளிகளின் உருவங்கள் பதிவாகவில்லை.
கொள்ளையர்கள் வந்தது உண்மை என்றால், சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவோ அல்லது சம்பவம் நடந்த பிறகோ அவர்கள் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கும். எந்த சிசிடிவி கேமராவிலும் அவர்களது உருவங்கள் பதிவாகாததால், இந்த கொலை மற்றும் கொள்ளையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
எனவே, மனைவியின் இறுதிச் சடங்குக்காக காஞ்சிபுரம் சென்றிருந்த குருக்கள் பாலகணேஷ் இன்று சென்னை திரும்பியதும், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்திய காவல்துறையினரிடம், மனைவியை கொன்றுவிட்டு கொள்ளையர்கள் வந்ததாக நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், இந்த கொலையில், பாலகணேஷுக்கு வேறு ஒருவர் உதவியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவியைக் கொன்றுவிட்டு கழிவறையில் கிடந்த பாலகணேஷின் கைகள் கட்டப்பட்டிருந்ததால், அவரது கைகளை யாரோ ஒருவர்தான் கட்டியிருக்க வேண்டும். எனவே அவருக்கு ஒருவர் உதவி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் யார் என்று காவல்துறையினர் விசாரித்த வருகிறார்.