தமிழ்நாடு

காலதாமதம் என்று நினைக்கவில்லை: உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து!

DIN

புதுதில்லி: அடுத்த மாதம் முன்றாம் தேதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தோடு ஆஜராகுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை காலதாமதம் என்று கருதவில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கருத்துத் தெரிவித்துள்ளார்.   

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், காவிரி மேல்முறையீட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரியும், தீர்ப்பில் தெரிவித்த "ஸ்கீம்' (செயல்திட்டம்) என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், புதுச்சேரி அரசு கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன் சார்பில் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவும், காவிரி இறுதித் தீர்ப்பை தாமதமின்றி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி புதுச்சேரி அரசு சார்பிலான இடைக்கால மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள் நண்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் நாங்கள் குறிப்பிடவில்லை. நதிநீர் பங்கீடு தொடர்பான எங்களது தீர்ப்பில் நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம். உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாதது வருத்தமளிக்கிறது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பங்கீட்டில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண முடியாது.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் மே 3ம் தேதிக்குள் காவிரி நீதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கினை அன்றே ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.   

இந்நிலையில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை காலதாமதம் என்று கருதவில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கருத்துத் தெரிவித்துள்ளார். காவிரி விசாரணையின் பொருட்டு நீதிமன்றம் வந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

அடுத்த மாதம் முன்றாம் தேதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தோடு ஆஜராகுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானத்து, தமிழகத்தின் நீண்ட நெடிய சட்டப் போராட்டடத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை காலதாமதம் என்று கருதவில்லை. 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு மிகவும் தாமதமாக மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்களும் மனுதாக்கல்  செய்திருந்தோம். அதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு கடுமையான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இதனை திட்ட வட்டமான இறுதி தீர்ப்பு என்று கருதுகிறோம். மேற்கொண்டு காலதாமதம் செய்யாமல் மே 3 அன்று திட்டத்தின் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என்பது தனியாக கிடையாது. அது உங்களது தவறான புரிதல். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும், அதனை ஒட்டிய உச்ச நீதிமன்ற உத்தரவிலும் திட்டம் என்று குறிப்பிடப்படுவதில் அனைத்தும் அடங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT