தமிழ்நாடு

50 ஆண்டுகளுக்கும் மேலாக அகலப்படுத்தப்படாத ரயில்வே மேம்பாலம் 

ஆர். தர்மலிங்கம்

கோவை-பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் நாள்தோறும் வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் முக்கிய வழித்தடத்தில் உள்ளது மதுக்கரை ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்துக்கு அருகில் மாநில நெடுஞ்சாலைக்குச் சொந்தமான மரப்பாலம் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. 

இந்தப் பாலத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லக்கூடிய வகையில் அப்போதைய போக்குவரத்தைக் கணக்கில் கொண்டு கட்டப்பட்டது. 

ஆனால், அதன் பிறகு இந்த வழித்தடத்தில் உள்ள மதுக்கரை, மரப்பாலம், திருமலையம்பாளையம், எட்டிமடை, க.க.சாவடி, நவக்கரை ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் பெருகியுள்ளன. மேலும் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. மேலும் கோவையில் கேரளத்தை சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் வசிப்பதால் இரு மாநிலத்துக்குமான பயணிகள் போக்குவரத்து இந்த சாலையில் அதிக அளவில் உள்ளது. 

கோவை வழியாக கேரளம் செல்லும் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரயில்வே பாலத்தை கடந்து செல்கின்றன. 

நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்: அதிக அளவிலான வாகனப் போக்குவரத்தால் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் ரயில்வே பாலத்தின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. மேலும், ஒரே சமயத்தில் ஒரு பேருந்து அல்லது லாரி மட்டுமே செல்ல முடிவதால் எதிர் திசையில் வரும் வாகனங்களும் சில வேளைகளில் கடக்க முயல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுபோன்ற வேளைகளில் மதுக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. மற்ற வேளைகளில் ஓட்டுநர்களுக்கிடையே தகராறு, அடிதடி போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும், பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் பாலத்தின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பங்களில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. 

பாலக்காடு ரயில்வே கோட்ட எல்லைக்குள் வருவதால் அனுமதி மறுப்பா ? மதுக்கரை பாலமானது பாலக்காடு ரயில்வே கோட்ட எல்லைக்குள் வருகிறது. பாலத்தின் கீழ் உள்ள சாலைப் பகுதி மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதாக இருந்தாலும் இந்தப் பாலத்தை அகலப்படுத்த ரயில்வே அதிகாரிகளின்அனுமதி பெறுவது மிகவும் அவசியமாகும். பாலத்தை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டால் இந்த வழியாகச் செல்லும் ரயில்களை பொள்ளாச்சி வழியாக மாற்றுப் பாதையில் சில நாள்களுக்கு இயக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் அதற்கான பணிகள் தொடங்கப்படுவதற்கான அறிகுறிகளே இல்லை என்கின்றனர் மதுக்கரை பகுதி பொதுமக்கள்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் கூறுகையில், பணிக்குச் செல்வோர் நாள்தோறும் காலை வேளையில் இருசக்கர வாகனத்தில் இந்தப் பாலத்தை கடக்க வேண்டியுள்ளது. இந்தப் பாலத்தைக் கடக்க அதிக அளவில் வாகனங்கள் நிற்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். அதே வேளையில் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் வரையில் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணிக்குச் செல்வதில் தாமதமாகிறது. ஆகவே, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார். 

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த ரூ. 50 கோடி நிதி கேட்டு அரசுக்குத் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்தவுடன் பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியைத் தொடங்குவோம் என்றனர். 

முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்: கோவைக்கு மார்ச் 26-ஆம் தேதி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், உக்கடம்-ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க ரூ. 215.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே கோவை-பாலக்காடு வழித்தடத்தில் பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நெருக்கடியில் அவதிப்பட்டு வரும் பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மரப்பாலம் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

நெடுஞ்சாலைத் துறை முதல்வரின் வசம் உள்ளதால் பாலத்தை அகலப்படுத்துவதற்கான நிதியை உடனடியாக வழங்கி பணிகளை விரைவாக மேற்கொண்டால் மட்டுமே கோவை-பாலக்காடு சாலை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு ஏற்படும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT