கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா, கூடலூர் அருகே உள்ள பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா, கூடலூர் அருகே உள்ள பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
தமிழக- கேரள எல்லை, பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் ஏப்.30 ஆம் தேதி சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி, பளியன்குடியில் புதன்கிழமை காலை, கண்ணகி அறக்கட்டளையினர் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது. பச்சை மூங்கிலில் கொடி மரம் தயார் செய்து அதில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்துக்கு தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் பூசாரி ராஜா பூஜை வழிபாடுகள் செய்தார். இதைத் தொடர்ந்து காப்புகட்டு நிகழ்ச்சியும், மாலை அணியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர்.
நிகழ்ச்சியில் கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் ரா.தமிழாதன், செயலர் த.ராஜ்கணேசன், பொருளாளர் பி.எஸ்.எம்.முருகன் மற்றும் கண்ணகி மகளிர் அணியினர், கண்ணகி கோயில் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.